/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பிளாஸ்டிக் குப்பையால் பாழாகும் பழநி
/
பிளாஸ்டிக் குப்பையால் பாழாகும் பழநி
ADDED : பிப் 03, 2025 05:48 AM

திண்டுக்கல்: பல லட்சம் பக்தர்கள் வந்து செல்லும் பழநியில் பிளாஸ்டிக் குப்பையை முறையாக அள்ளாமல் அப்படியே விட்டுள்ளதால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இங்கு கார்த்திகை மாத ஐயப்ப சீசன் தொடங்கி தைப்பூசம், பங்குனி உத்திரம் வரை பக்தர்களின் வருகை அதிகம் இருக்கும்.
தற்போது தைப்பூசத்திற்கு 10 நாட்களே உள்ள நிலையில் நாள்தோறும் பல்லாயிரணக்கான பக்தர்கள் பாதையாத்திரையாக வந்து செல்கின்றனர். தைப்பூசம் நெருங்கும் வேளையில் லட்சக்கணக்காண பக்தர்கள் பழநியில் குவிவர். ஏற்கனவே பார்க்கிங் உட்பட அடிப்படை வசதிகளை முறையாக கோயில் நிர்வாகம் செய்யவில்லை. இந்நிலையில் குப்பையை கூட அள்ளாமல் பக்தர்களை அவதியடைய வைத்துள்ளனர்.ஏற்கனவே குப்பை தொட்டியில்லா உள்ளாட்சி அமைப்புகள் என்ற பெயரில் குப்பைத்தொட்டிகள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டதால் உள்ளூர் வாசிகள் கிடைக்கும் இடங்களில் குப்பையை கொட்டி செல்கின்றனர். இதில் பெரிய பார்க்கிங் அருகே வரவேற்பு கம்பளம் போல் இருபுறங்களிலும் பிளாஸ்டிக் குப்பை சேர்ந்துள்ளது. இதை அகற்றுவதற்கான எந்தவித நடவடிக்கையும் இல்லை.இதற்கு முக்கிய காரணம் நகராட்சிக்கும், கோயில் நிர்வாகம் என இரு நிர்வாகத்தினருக்கும் நடக்கும் பனிப்போர் தான். குறிப்பாக குப்பை பிரச்னை, தேவஸ்தானத்திற்கு சொந்தமான குப்பையை நகராட்சி கண்டுகொள்வதில்லை. இவர்களும் பொதுவான ஒரு இடத்தில் கொட்டிவிட்டு அவர்கள் பார்த்து கொள்வர் என விட்டுவிடுகின்றனர். இதில் பாதிக்கப்படுவது பழநி வாழ் மக்களும், வெளியூர் பக்தர்கள் தான். ஆனால் வி.ஐ.பி.,க்கள் வந்தால் அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக நடக்கிறது.
கொஞ்சம் கூட நகர வளர்ச்சி பணிக்கு ஒதுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு ஆண்டாண்டு காலமாக தொடர்கிறது. ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் மாறி கொண்டே இருந்தாலும், இதற்கு நிரந்தர தீர்வு காண்பதில்லை. சாதாரண மக்களிடம் கரார் காட்டும் நகராட்சி நிர்வாகம் கோயில் நிர்வாகத்திடம் வரி வசூலிப்பதில் கறார் காட்டுவதில்லை. நகராட்சி, கோயில் நிர்வாகத்தின் பிரச்னையில் பொதுமக்கள், பக்தர்கள்தான் பாதிக்கின்றனர்.