/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காய்கறிகள் விலை வீழ்ச்சியால் விரக்தி: விவசாயிகள் பாதிப்பு
/
காய்கறிகள் விலை வீழ்ச்சியால் விரக்தி: விவசாயிகள் பாதிப்பு
காய்கறிகள் விலை வீழ்ச்சியால் விரக்தி: விவசாயிகள் பாதிப்பு
காய்கறிகள் விலை வீழ்ச்சியால் விரக்தி: விவசாயிகள் பாதிப்பு
ADDED : ஏப் 24, 2025 06:27 AM

திண்டுக்கல் மாவட்டத்தை பொருத்தமட்டில் கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, பழநி, கன்னிவாடி,நத்தம், வேடசந்துார் உள்ளிட்ட பகுதிகளில் காய்கறிகள் உற்பத்தியாகின்றன. குறுகிய கால பயிர்களை அதிகளவு சாகுபடி செய்வதை விவசாயிகள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
சில மாதங்களாக மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளுக்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வெகுவாக பாதிக்கும் நிலை உள்ளது. இடைத்தரகர்களின் ஆதிக்கத்தால் விவசாயிகள் உற்பத்தி செலவை கூட ஈட்ட முடியாமல் கை நஷ்டத்தை சந்திக்கின்றனர்.ஒவ்வொரு பருவ காலங்களிலும் விவசாயிகள் கூடுதல் பரப்பில் காய்கறிகளை உற்பத்தி செய்யப்படும் நிலையில் அவை மார்க்கெட்டிற்கு வரும்போது வரத்து அதிகரிப்பால் விலை படுபாதாளத்திற்கு செல்கிறது. இதனால் கட்டுப்படியான விலை கிடைக்காமல் நஷ்டத்திற்கு விற்கும் போக்கு உள்ளது.
இத்தகைய காலகட்டங்களில் விவசாயிகள் உற்பத்தி செலவு கூட ஈட்ட முடியாமல் கடனாளியாக தவிக்கும் சூழல் நிலவுகிறது. இதை தவிர்க்க உற்பத்தி செய்யப்படும் காய்கறி பயிர்களுக்கு அரசு மாவட்ட வேளாண் விற்பனை துறை மூலம் நிர்ணய விலையை அறிவிக்க வேண்டும். பருவ காலத்தில் பயிர் செய்யப்படும் பரப்புகளின் அளவீடு,உற்பத்தி குறித்து தோட்டக்கலைத்துறை விவசாயிகளுக்கு அவ்வப்போது ஆலோசனை வழங்க வேண்டும்.
விலை வீழ்ச்சி தருணங்களில் காய்கறி பயிர்களை பாதுகாக்க குளிர்சாதன கிடங்கு அமைத்தல் , காய்கறி பயிர்களில் மதிப்பு கூட்டு பொருள்கள் தயார் செய்வது குறித்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் தோட்டக்கலைத் துறை ,வேளாண் விற்பனைத்துறை விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கும் பட்சத்தில் விலை வீழ்ச்சி காலங்களில் விவசாயிகள் இவற்றை மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி விலை வீழ்ச்சியிலிருந்து தப்பி லாபகரமான விலையை பெற முடியும்.
இதன் மூலம் விவசாயிகளுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும். இதை கருதி மாவட்ட நிர்வாகம் காய்கறி பயிர்களிலிருந்து மதிப்பு கூட்டு பொருள் தயார் செய்வது குறித்த பயிற்சிகளை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.