/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரயில்வே சுரங்கப்பாதை பணியால் குறுகிய ரோட்டில் வாகன போக்குவரத்து; துாக்கம் கெட்டு விபத்து அச்சத்தில் பரிதவிக்கும் காந்திஜிநகர் வாசிகள்
/
ரயில்வே சுரங்கப்பாதை பணியால் குறுகிய ரோட்டில் வாகன போக்குவரத்து; துாக்கம் கெட்டு விபத்து அச்சத்தில் பரிதவிக்கும் காந்திஜிநகர் வாசிகள்
ரயில்வே சுரங்கப்பாதை பணியால் குறுகிய ரோட்டில் வாகன போக்குவரத்து; துாக்கம் கெட்டு விபத்து அச்சத்தில் பரிதவிக்கும் காந்திஜிநகர் வாசிகள்
ரயில்வே சுரங்கப்பாதை பணியால் குறுகிய ரோட்டில் வாகன போக்குவரத்து; துாக்கம் கெட்டு விபத்து அச்சத்தில் பரிதவிக்கும் காந்திஜிநகர் வாசிகள்
ADDED : ஆக 19, 2025 01:00 AM

திண்டுக்கல்; பல ஆண்டுகளாக நீடிக்கும் சுரங்கப்பாதை பணியால் திண்டுக்கல் பழைய கரூர் ரோட்டிற்கு செல்ல குறுகிய ரோடான காந்திஜி நகர் பகுதி ரோடை வாகனங்களில் செல்வோர் பயன்படுத்துவதால் அதிகாலை முதல் இரவிலும் வாகன சத்தத்தாலும் ரோடு சேதத்தாலும் காந்திஜிநகர் குடியிருப்பு வாசிகள் அவதிப்படுகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பஸ் போக்குவரத்து உள்ளது. இதற்கு வசதியாக தனித்தனி மார்க்கமாக ரோடுகள் உள்ளன.
திண்டுக்கல்லில் இருந்து கரூர், திருச்சிக்கு செல்லும் ரோடுகள் நேருஜிநகரில் பிரிந்து செல்கின்றன. இந்த 2 ரோடுகளுக்கும் மிக அருகே ரயில்வே கேட்டுகள் இருந்தன.
இதனால் திருச்சி ரோட்டில் ரயில்வே மேம்பாலம், பழைய கரூர் ரோட்டில் சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருச்சி ரோட்டில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
சுரங்கபாதைக்கு 2018ல் ரூ.17.45 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கி 8 ஆண்டுகள் கடந்தும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.
பழைய கரூர் ரோட்டில் பல்வேறு குடியிருப்பு பகுதிகள், பள்ளி, கல்லுாரிகள் உள்ளன. சுரங்கப்பாதை பணியால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தொடங்கி அனைவருமே காந்திஜி நகர் ரோடை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ரோடு குறுகலாக உள்ளதோடு காலை, மாலை இரு வேளைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கனரக வாகனங்கள் வரை இந்த ரோட்டை பயன்படுத்துவதால் ரோடு சேதமடைந்து பள்ளம் மேடாக காட்சியளிக்கிறது.
அவ்வப்போது மண்ணைக்கொட்டி சமன்படுத்தினாலும் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை.
இந்த ரோடு இரு புறமும் வீடுகள் அதிகம் உள்ளன. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் அதிகாலை முதல் இரவு வரை தொடர்ந்து எழும் வாகன சத்தத்தால் துாக்கம் கெட்டு தவிக்கின்றனர்.
குழந்தைகளை வீடுகளை விட்டு வெளியே அனுப்ப பெற்றோர் அச்சப்படுகின்றனர்.
இரவு நேரங்களில் போதிய வெளிச்சமில்லாததால் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகின்றனர். சேதமான ரோடுகளால் விபத்து அபாயமும் ஏற்படுகிறது.
தீர்வு காண வேண்டும் ஜெயசித்ரா, காந்திஜிநகர் திண்டுக்கல்: குடியிருப்பு பகுதிகள் அதிகமுள்ள ரோடை பெரும்பாலானோர் பயன்படுத்துவதால் அச்சத்துடன் வசிக்க வேண்டியதாய் உள்ளது.
தொடர் வாகன போக்குவரத்து எப்போதும் இருப்பதால் நடைபயிற்சி மேற்கொள்வதற்குகூட தயக்கம் காட்ட வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.
வாகனங்களின் சத்தம் இரவு நேரங்களில் துாங்க முடியாமல் செய்கின்றன. இந்த ரோடுகளை சரிசெய்வதோடு சுரங்கப்பாதை பணிகளையும் முடித்து தீர்வு காண வேண்டும்.
நடவடிக்கை தேவை நாககுமார், கூட்டுறவு நகர், திண்டுக்கல்: நீண்ட ஆண்டுகளாக பாலம்பணி நடைபெற்று வருகிறது இன்னும் பணி நிறைவு பெறவில்லை. இவ்வழியாக கரூர், குஜிலியம்பாறை, எரியோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினசரி சென்று வரும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காந்திஜிநகர், ரோடுகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் ரோடுகள் சேதமாகின்றன. ஒரு சிறு மழை பெய்தால் கூட நீர் தேங்கி விடுகிறது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

