/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மழைநீர் வடிகாலில் குவிக்கப்படும் குப்பை கழிவுகள்; திடக்கழிவு மேலாண்மையில் நீடிக்கும் அலட்சியத்தால் பாதிப்பு
/
மழைநீர் வடிகாலில் குவிக்கப்படும் குப்பை கழிவுகள்; திடக்கழிவு மேலாண்மையில் நீடிக்கும் அலட்சியத்தால் பாதிப்பு
மழைநீர் வடிகாலில் குவிக்கப்படும் குப்பை கழிவுகள்; திடக்கழிவு மேலாண்மையில் நீடிக்கும் அலட்சியத்தால் பாதிப்பு
மழைநீர் வடிகாலில் குவிக்கப்படும் குப்பை கழிவுகள்; திடக்கழிவு மேலாண்மையில் நீடிக்கும் அலட்சியத்தால் பாதிப்பு
ADDED : அக் 02, 2024 07:10 AM

சின்னாளபட்டி : சின்னாளபட்டி பேரூராட்சி, காந்திகிராம ஊராட்சி நிர்வாகங்களில் திடக்கழிவு மேலாண்மையில் நீடிக்கும் அலட்சியத்தால் நான்கு வழிச்சாலை பகுதியில் அடிக்கடி புகைமண்டலம் பரவி இப்பகுதியில் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.
சின்னாளபட்டி பேரூராட்சியின் 18 வது வார்டுக்கு உட்பட்ட திருநகர் காலனி திண்டுக்கல் மதுரை தேசிய நான்குவழிச் சாலை பகுதியில் அமைந்துள்ளது. இதையடுத்துள்ள சவுந்தரம் நகர் காந்திகிராமம் ஊராட்சி பகுதியில் எல்லையாக அமைந்துள்ளது. நான்கு வழிச்சாலையில் இருந்து சின்னாளபட்டிக்கு வரும் சர்வீஸ் ரோட்டில் மழை நீர் செல்லும் நீர்வரத்து வாய்க்காலில் அரை கிலோ மீட்டர் துாரத்திற்கு சாலையின் இரு புறமும் பாலிதீன் மருத்துவ குப்பை கழிவுகள் குவிக்கப்பட்டு வருகிறது. சின்னாளபட்டி சிறப்பு நிலை பேரூராட்சி ,காந்திகிராம் ஊராட்சி நிர்வாகங்களில் திடக்கழிவு மேலாண்மை செயல்பாட்டில் உள்ள அலட்சியத்தால் இப்பிரச்னைக்கு பல மாதங்களாக தீர்வு காணப்படாமல் உள்ளது. இரவு, அதிகாலை நேரங்களில் குப்பை கழிவுகளில் சிலர் தீ வைத்து எரியூட்டுகின்றனர். பாலிதீன், மருத்துவ கழிவுகளில் இருந்து வெளியேறும் புகை மூட்டத்தால் திருநகர் காலனி, சவுந்தரம் காலனி, காந்திகிராமம் கஸ்தூரிபா மருத்துவமனை பகுதியை சுற்றிய குடியிருப்பு வாசிகள் மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கின்றனர். இப்பகுதி மருத்துவமனையில் தங்கியுள்ள நோயாளிகள், கர்ப்பிணிகள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
நான்கு வழிச்சாலை மேற்கு புறமுள்ள ரோட்டில் தென்னை மட்டைகளை குவித்து அடிக்கடி எரியூட்டும் வாடிக்கையாகிவிட்டது .இப்பகுதியில் பரவும் புகைமண்டலம் பாதசாரிகள், வாகனங்களில் பயணிப்போரை நிலைகுலைய செய்கிறது. நான்கு வழிச்சாலையிலும் படர்ந்துள்ள புகை மூட்டத்தால் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்களும் எதிரேவரும் வாகனங்களை கண்டறிய முடியாத அளவிற்கு தடுமாறி விபத்துக்குள்ளாகும் அவலமும் நீடிக்கிறது.
காந்திகிராமம் ஊராட்சி, சின்னாளபட்டி பேரூராட்சியின் திடக்கழிவு மேலாண்மை செயல்பாடுகளை கண்காணித்து முறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் .
அலட்சியத்தால் அவதி
துரைப்பாண்டி,ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர், காந்திகிராமம் : அம்பாத்துறை சர்வீஸ் ரோட்டில் இருந்து சின்னாளப்பட்டி விலக்கு ரோடு சந்திப்பு வரை ரோட்டோரத்தில் மழை நீர் செல்வதற்கான வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் குப்பை மட்டுமின்றி இறைச்சி, பாலிதீன் கழிவுகளை மலை போல் குவித்து வருகின்றனர். அவ்வப்போது இவற்றிற்கு தீயிட்டு எரிக்கும் சூழலில் சுற்றுச்சூழல் மாசடைவதுடன் மக்களும் சிரமங்களை எதிர்கொள்ளும் அவல நிலைக்கு தள்ளப்படுவது தொடர்கிறது. பேரூராட்சி நிர்வாகம், காந்திகிராமம் ஊராட்சி எல்லை பகுதி அருகே குப்பையை குவிக்கும் அவலங்களும் அரங்கேறுகிறது.
கட்டுப்படுத்த வேண்டும்
பால்பாண்டி,ஊராட்சி வார்டு உறுப்பினர், காந்திகிராமம் : வாகனங்கள் மட்டுமின்றி சுற்றிய பல பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் இத்தடத்தில் பாதசாரிகளாக நடந்து செல்வது வழக்கமாக கொண்டுள்ளனர். பாலிதீன், மருத்துவ கழிவுகளில் இருந்து வெளியேறும் புகை மாணவர்களையும், முதியோர், பெண்களையும் மூச்சு திணறல் உள்ளிட்ட சிரமங்களுக்கு உள்ளாக்கி வருகிறது. சின்னாளபட்டி பேரூராட்சி நிர்வாகமும் இப்பிரச்னையை கண்டு கொள்வதில்லை. மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து வரத்து வாய்க்காலில் கழிவுகளை நிரந்தரமாக அகற்ற வேண்டியது அவசியம்.