நங்காஞ்சி ஆற்றுப்பாலத்தில் குப்பையால் சுகாதாரக்கேடு
நங்காஞ்சி ஆற்றுப்பாலத்தில் குப்பையால் சுகாதாரக்கேடு
UPDATED : நவ 11, 2026 11:34 PM
ADDED : நவ 11, 2026 10:12 PM

ஒட்டன்சத்திரம்: தங்கச்சியம்மாபட்டி நங்காஞ்சி ஆற்றுப்பாலத்தில் குப்பை கொட்டுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
ஒட்டன்சத்திரத்தில் இருந்து தாராபுரம் செல்லும் ரோட்டில் தங்கச்சியம்மாபட்டி அருகே நங்காஞ்சி ஆற்றை கடப்பதற்கு புதிதாக பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் அருகிலேயே பழைய பாலம் உள்ளது. தற்போது இந்த பாலம் பயனற்று இருப்பதால் பாலத்திற்கு செல்லும் வழியில் பழைய துணிகள், இறைச்சிக் கழிவுகள் என அனைத்து விதமான குப்பைக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது.
இவற்றை முறையாக அப்புறப்படுத்தாமல் விடுவதால் மழை பெய்யும்போது அப்பகுதியில் துர்நாற்றம் கிளம்புகிறது. குப்பையை தீ வைத்து எரிக்கும்போது சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்படுவதால் நீர்நிலையும் மாசுபடுகிறது.
இப்பகுதியில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
