/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குப்பையால் நோய் தொற்று;பழநி சிவகிரிபட்டியில் அவதி
/
குப்பையால் நோய் தொற்று;பழநி சிவகிரிபட்டியில் அவதி
ADDED : பிப் 07, 2024 07:00 AM

பழநி : பழநி ஒன்றியத்திற்குட்பட்ட சிவகிரிபட்டி ஊராட்சியில் குப்பை கொட்ட இடம் இல்லாமல் ஆங்காங்கு கொட்டப்படுவதால் சுகாதாரக்கேடால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
பழநி நகரப் பகுதிக்கு அருகிலுள்ள பழநியாண்டவர் நகர், நேதாஜி நகர், திருநகர், மருத்துவ நகர், மயிலாடும்பாறை, வள்ளி நகர் உள்ளிட்ட பகுதிகளை கொண்ட இந்த ஊராட்சியில் முறைப்படி குப்பை அகற்ற படாமல் உள்ளது. இப்பகுதிகளில் சுகாதார வளாகம் இல்லாமல் உள்ளது. முறையான சாலை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகின்றனர். சாக்கடை வசதிகள் சரி வர இல்லை. சாக்கடைகளை துாய்மைப்படுத்துவது அறவே இல்லை. சிவகிரிபட்டி பைபாஸ் ரோடு ஓரங்களில் குப்பை கொட்டப்பட்டு உள்ளது. சித்தா கல்லுாரி மைதானத்தில் குப்பை கொட்டப்பட்டு அப்பகுதி சுகாதாரமின்றி உள்ளது. இதனால் தொற்று உருவாகும் அபாயம் ஏற்படுகிறது. ஊராட்சிக்கு தேவையான அளவு பணியாளர்கள் இல்லாததால் ஊராட்சி பணிகள் தொய்வு உள்ளன.
சாக்கடை அடைப்பு
பாலாஜி, விவசாயி, சர்ச் ரோடு : சாக்கடை நீர் வெளியேறாத வண்ணம் கான்கிரீட் போட்டு சாக்கடையை அடைத்துள்ளனர்.பல ஆண்டுகாலமாக சிரமப்படுகிறோம் . எங்கள் பகுதியை நகராட்சியுடன் இணைத்தால் அனைத்து வசதிகளையும் எளிதாக பெற முடியும் .அரசு விரைவில் கலிக்கநாயக்கன்பட்டி பகுதியை பழநி நகராட்சியுடன் இணைக்க வேண்டும்.
கழிவுநீர் தொற்று
கார்த்திகேயன், சமூக ஆர்வலர், மயிலாடும்பாறை: சாக்கடைகளில் செடி முளைத்து முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் கழிவுநீர் பொது இடங்களில் தேங்கி நிற்கிறது. நோய்த்தொற்றும் ஏற்படுகிறது. தெரு விளக்குகள் இல்லை. ஓம் சக்தி நகர், வள்ளி நகர் பகுதிகளில் சாலைகள் இல்லை. போக்குவரத்திற்கு தகுதியற்றதாக உள்ளது.
வசதிகள் நிறைவேற்றம்
பிருந்தா, ஊராட்சி துணைத்தலைவர்: ஊராட்சியில் சுகாதாரப் பணிகள் முறையாக நடைபெற்று வருகிறது. ஆதி திராவிட மேம்பாட்டு நிதியில் ரூ.ஒரு கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் ராமநாத நகர்,மருத்துவ நகர், திருநகர், தட்டான் குளம் பகுதிகளில் தார் , சிமென்ட் சாலை, சாக்கடை பணிகள், தெருவிளக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது. ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் ,குடிநீர் கட்டமைப்பு ,சித்தா நகரில் குடிநீர் தொட்டி உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.
ரூ.3 கோடிக்கு பணிகள்
சுப்புலட்சுமி , ஊராட்சி தலைவர்: தைப்பூசத்தை முன்னிட்டு சண்முக நதியில் ஜனவரி 1 முதல் தினமும் டிராக்டர்கள் மூலம் குப்பை அள்ளப்படுகிறது. பைபாஸ் சாலை சித்தா கல்லுாரி பகுதியில் குப்பை கொட்டப்படுவதை கண்காணித்தாலும் தடுக்க இயலவில்லை. ஊராட்சியில் குப்பை கொட்ட இடம் இல்லை.
பணியாளர்கள் பற்றாக்குறை அதிகம் உள்ளது. பல்வேறு திட்டங்கள் மூலம் ஊராட்சியில் உள்ள வார்டுகளுக்கு சாலை,சாக்கடை, தண்ணீர் வசதிகள் ஏற்படுத்தி தரப்படுகிறது. இதுவரை ரூ. மூன்று கோடி திட்டப் பணிகள் நடைபெற்று உள்ளது. தைப்பூச சுகாதார பணியில் ஈடுபட்ட நபர்கள் 40 பேர் தனியாக நியமிக்கப்பட்டவர்கள்.
கோயில் சார்பில் எந்த ஒரு நிதியும் இதுவரை சிவகிரி பட்டி ஊராட்சிக்கு தரவில்லை என்றார்.

