/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மேல்நிலைத்தொட்டி பணியில் சுணக்கம்
/
மேல்நிலைத்தொட்டி பணியில் சுணக்கம்
ADDED : நவ 20, 2024 04:56 AM

வேடசந்துார், : குட்டம் ஊராட்சியில் போதிய வருமானம் இல்லாத நிலையில் மக்கள் பங்களிப்புடன் குளம் துார்வாரி கரையை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஒன்பது குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் அமைக்க நிதி ஒதுக்கிய நிலையில் இன்னும் பணிகள் துவங்கவில்லை. அதேபோல் மலையோர பகுதியில் 3 கி.மீ., துாரத்திற்கு தார் ரோடு, பாலம் வசதி இல்லாததால் இப்பகுதி மக்கள் மிகுந்த பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர்.
வேடசந்துார் ஒன்றியம் குட்டம் ஊராட்சி பகுதியில் கருமலை , ரங்கமலை உள்ளதால் இயற்கை எழிலுடன் கூடிய பசுமை நிறைந்த ஊராட்சியாக உள்ளது.
ஊராட்சிக்கு வருமானம் தரக்கூடிய தொழில் நிறுவனங்கள்,தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. ஊராட்சியில் 9 இடங்களில் குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் அமைக்க நிதி ஒதுக்கியும் சல்லி மேடு என்ற ஒரு இடத்தில் மட்டுமே டேங்க் அமைந்துள்ளனர்.
மற்றொரு இடத்தில் பில்லர் மட்டும் அமைத்துள்ளனர். மற்ற இடங்களில் இன்னும் பணிகள் துவக்கவில்லை. ஒப்பந்தம் எடுத்தவர்கள் ஆர்வம் காட்டாததால் திட்டம் கிடப்பில் உள்ளது.
குடிநீர் வசதியை பொறுத்தவரை பிரச்னை இல்லை. அருகிலுள்ள அழகாபுரி அணையில் தண்ணீர் தேங்கினால் இங்கு குடிநீர் பற்றாக்குறை இருக்காது என்கின்றனர்.
இந்த ஊராட்சியில் தான் ஜல்ஜீவன் மிஷின் குடிநீர் திட்டத்தின் கீழ் அனைத்து ஊர்களுக்கும் வீடு வாரியாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இங்குள்ள திருமாணிக்ககவுண்டர் குளத்தை பொதுமக்கள் பங்களிப்புடன் துார்வாரி கரையை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கன்னிமார் கோயில் தார்சாலை முதல் கரிசல்மடை வழியாக குரும்பபட்டி தார்சாலை இணைப்பு வரை 3 கி.மீ., துாரமுள்ள மண் ரோட்டை மெட்டல் ரோடு ஆக மாற்றித் தர வேண்டும் என இப்பகுதி மக்கள் 50 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால இதுவரை இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.
தேவை பாலம்
எம்.சென்ராயன், விவசாயி,, தலையூத்துப்பட்டி: கன்னிமார்கோயில் தார் சாலை முதல் கரிசல்மடை வழியாக பாறைப்பட்டி குரும்பபட்டி தார் சாலை இணைப்பு வரை 3 கி.மீ., துாரமுள்ள ரோடு மண் சாலையாகவே உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளான நிலையில் இன்னும் ரோடு வசதி கூட இல்லாததால் இப்பகுதியில் உள்ள 40க்கு மேற்பட்ட குடும்பங்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகின்றனர். இதேபோல் இந்த ரோடு அருகே உள்ள கரிசல் மடை குளத்திற்கு செல்லும் வாய்க்கால் மண் சாலையை கடந்து செல்வதால் பாலம் வசதி அவசியம் தேவை.
மாணவர்கள் அவதி
கே.வாசுதேவன், விவசாயி, தலையூத்துப்பட்டி: கரிசல்மடை குளத்திற்கு செல்லும் வாய்க்கால் மண் ரோட்டின் குறுக்காக செல்கிறது. இதனால் மழைக்காலங்களில் கூடுதலான தண்ணீர் தேங்கி நிற்பதால் ஒரு மாத காலத்திற்கு இப்பகுதி மக்கள் இந்த வழியாக செல்ல முடியவில்லை.
சுற்றிச் செல்லும் நிலை உள்ளது. 50 ஆண்டு காலமாக தொடர்ந்து மனு அளித்து வருகிறோம். ரோடு அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை. இப்பகுதி பள்ளி மாணவர்கள் அவதிக்கு ஆளாகின்றனர்.
முழுமையாக நடக்க வில்லை
ப.பழனியம்மாள், ஊராட்சி தலைவர், குட்டம்: நாங்கள் வந்த பிறகுதான் புதிதாக ஊராட்சி அலுவலகம் கட்டப்பட்டது. இதற்கு ஒதுக்கிய நிதி பற்றாக்குறையாக இருந்த நிலையில் கூடுதலாக ரூ.5 லட்சம் செலவு செய்து நல்ல முறையில் அலுவலகத்தை கட்டி உள்ளோம். அடுத்த நிதியில் காம்பவுண்ட் சுவரும் கட்டினோம். அதேபோல் ஜல் ஜீவன் மிஷின் திட்டத்தின் கீழ் அனைத்து குக்கிராமங்களிலும் வீடு தோறும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது திருமாணிக்ககவுண்டர் குளத்தை பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.8.90 லட்சம் செலவில் துார்வாரி கரையை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 9 இடங்களில் குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இன்னும் பணிகளை முழுமையாக நடைபெறவில்லை என்றார்.