/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தலைமையாசிரியர் இல்லாத அரசு பள்ளி ஆசிரியர்கள் இல்லாமல் தமிழோடு ஆங்கில வழி
/
தலைமையாசிரியர் இல்லாத அரசு பள்ளி ஆசிரியர்கள் இல்லாமல் தமிழோடு ஆங்கில வழி
தலைமையாசிரியர் இல்லாத அரசு பள்ளி ஆசிரியர்கள் இல்லாமல் தமிழோடு ஆங்கில வழி
தலைமையாசிரியர் இல்லாத அரசு பள்ளி ஆசிரியர்கள் இல்லாமல் தமிழோடு ஆங்கில வழி
ADDED : ஜூலை 29, 2025 12:53 AM

தாடிக்கொம்பு: திண்டுக்கல் தாடிக்கொம்பு அரசு துவக்க பள்ளியில் 237 மாணவர்கள் படித்து வரும் நிலையில் தலைமையாசிரியர் பணியிடம், ஆங்கில வழி கல்விக்கான இரண்டு ஆசிரியர்கள் பணியிடமும் காலியாக உள்ளதால் தமிழ் வழி கல்வியோடு ஆங்கில வழி கல்வி மாணவர்களும் இணைந்து கல்வி கற்கும் நிலை தொடர்கிறது .
தாடிக்கொம்பு அரசு துவக்கப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வி, ஆங்கில வழிக் கல்வியும் நடை பெறுகிறது.
தமிழ் வழி கல்வியில் 119, ஆங்கில வழிக் கல்வியில் 118 மாணவர்கள் உள்ளனர். தலைமை ஆசிரியர் இடம் மாறி சென்றதால் அதன் பணியிடம் காலியாக உள்ளது. ஆங்கில வழிக் கல்வியில் முதல் இரண்டு வகுப்புகளுக்கு ஆங்கில வழி கல்வி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. ஆங்கில வழி கல்விக்கு ஆசிரியரே இல்லாத நிலையில்,
முதல் வகுப்பில் 30, இரண்டாம் வகுப்பில் 24 மாணவர்களுக்கு தமிழ் வழி கல்வியோடு இணைத்து பாடம் நடத்தப்படுகிறது. இதன் காரணமாக ஆங்கில வழி மாணவர்கள் பாதிக்கின்றனர்.
5 ஆசிரியர்கள் உள்ள இங்கு வாரத்தின் முதல் நாளான நேற்று மூன்று ஆசிரியர்கள் விடுமுறையில் சென்றதால் மற்ற வகுப்புகளை மீதமுள்ள இரு ஆசிரியர்களே கவனிக்கும் நிலையே ஏற்பட்டது.
இதன் காரணமாக சில வகுப்புகளில் மாணவர்கள் வெறுமனே பள்ளிக்கு வந்து சென்றனர். இது போன்ற நிலை அடிக்கடி நடப்பதாக பெற்றோர் குற்றம்சாட்டினர்.
இதன் மீது மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, தலைமை ஆசிரியர், ஆங்கில வழி கல்வி ஆசிரியர்களை நியமித்து அரசு பள்ளியை முறையாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தொடக்கக் கல்வி மாவட்ட அலுவலர் ராஜாராம் கூறுகையில்,'' ஆத்துார் வட்டார கல்வி அலுவலரிடம் கலந்து பேசி போதிய ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.