/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குறைகள்... கூச்சல்...வெளிநடப்பு... மாநகராட்சி கூட்டத்தில் காரசார விவாதம்
/
குறைகள்... கூச்சல்...வெளிநடப்பு... மாநகராட்சி கூட்டத்தில் காரசார விவாதம்
குறைகள்... கூச்சல்...வெளிநடப்பு... மாநகராட்சி கூட்டத்தில் காரசார விவாதம்
குறைகள்... கூச்சல்...வெளிநடப்பு... மாநகராட்சி கூட்டத்தில் காரசார விவாதம்
ADDED : அக் 18, 2024 07:50 AM
திண்டுக்கல்: வாக்குவாதம், கூச்சல், கவுன்சிலர் வெளிநடப்பு என காரசார விவாதத்தோடு திண்டுக்கல் மாநகராட்சி கூட்டம் நடந்தது.
திண்டுக்கல் மாநகராட்சி கூட்டம் மேயர் இளமதி (தி.மு.க.,) தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் ராஜப்பா (தி.மு.க.,) கமிஷனர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். செயற்பொறியாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கவுன்சிலர்கள் விவாதம்
தனபாலன் (பா.ஜ.,): பாதாள சாக்கடை திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை. மழைக்காலங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து ரோடு, வீடுகளில் தேங்குகிறது. எனது 14-வது வார்டில் தெருக்களில் குளம் போல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. கவுன்சிலராகி 3 ஆண்டாகிவிட்டது.
வார்டு மக்கள் என்னிடம் கேள்வி கேட்கும் போது எனக்கு அசிங்கமாக இருக்கிறது.(இவரை போன்று பாதாள சாக்கடை பிரச்னையை பிற கவுன்சிலர்களும் தெரிவித்தனர்.)
கமிஷனர்: பாதாள சாக்கடை திட்டத்தை முறைப்படுத்த விரைவில் கோவையை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் டெண்டர் விட்டு ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்படுவார்கள். அதன் பிறகு இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தப்படும்.
மேயர் : கவுன்சிலர் தனபாலன் அசிங்கமாக இருக்கிறது என மாநகராட்சி கூட்டத்தை அவமதிக்கும் வகையில் பேசுகிறார். அவ்வாறு பேசுவதை தவிர்க்க வேண்டும்.
துணை மேயர்: கூட்டம் நடக்கும் போதெல்லாம் 14-வது வார்டு கவுன்சிலர் மாநகராட்சியை அவமதிக்கும் வகையில் தான் பேசுகிறார். அடுத்த முறை உரிய விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையேல் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும்.
தனபாலன் (பா.ஜ.,): தான் வைத்திருந்த மடிக்கணினியைத் துாக்கி காண்பித்தப்படி ( அதில் வார்டு பகுதியில் சாக்கடை கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்பது போன்று வீடியோ ஓடியது) கழிவுநீரை உறிஞ்சுவதற்காக ஓராண்டுக்கு முன்பு எனது வார்டு பகுதியில் தொட்டி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் இதுவரை அமைக்கப்படவில்லை.எனவே மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நான் வெளிநடப்பு செய்கிறேன்.
(அப்போது கோஷமிட்டமிட்டபடியே வெளிநடப்பு செய்ய அவரிடம் தி.மு.க., கவுன்சிலர்கள் ஜான்பீட்டர், ஆனந்த் ஆகியோர் முதலில் மாயமான கிணற்றை கண்டுபிடியுங்கள் என கிண்டலாக கூற வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து கவுன்சிலர் தனபாலன் மீண்டும் கோஷமிட்டபடியே வெளியேறினார்.)
இந்திராணி (தி.மு.க.): நான் பொது சுகாதாரக்குழு தலைவராக இருக்கிறேன். ஆனால் அது பெயரளவில் மட்டுமே. எனக்கு தெரியாமல் வார்டு பகுதிகளில் சுகாதார முகாம்கள் நடக்கிறது.
பாதாள சாக்கடை பிரச்னை குறித்து யாரிடம் புகார் தெரிவிக்க வேண்டும் என்றே தெரியவில்லை. யாரிடம் தெரிவித்தாலும் மற்ற அதிகாரிகளை கை காட்டுகிறார்களே தவிர வேலை நடப்பதில்லை.
சுகாதாரக்குழு சார்பில் ஒரு கூட்டம் கூட நடத்தவில்லை. என்னை பணி செய்ய விடாமல் மாநகராட்சி தடுக்கிறது. மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் இருக்கிறது. அதை கையக்கப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. நான் மக்களுக்காக பணி செய்ய தயாராக இருக்கிறேன். ஆனால் என்னை பணி செய்ய விடாமல் ஏன் தடுக்கிறீர்கள். உங்களை கைகூப்பி கேட்கிறேன். வார்டு பகுதியில் வளர்ச்சி பணிகளை இனியாவது மேற்கொள்ள விடுங்கள் .
கமிஷனர்: உங்கள் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜோதிபாசு (மார்க்சிஸ்ட்): அதிகாரிகள் தான் ஆட்சி செய்கின்றனர். கவுன்சிலருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்றே தெரியவில்லை. வார்டு பகுதியில் சுகாதாரக்கேடு தலைவிரித்தாடுகிறது. துாய்மை பணியாளர்களுக்கு போனஸ் வழங்க கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வார்டு பகுதியில் பணி செய்ய வரும் அதிகாரிகள் கவுன்சிலருக்கு தகவல் கொடுப்பதே இல்லை.ஒரு வார்டில் கூட உதவி பொறியாளர்கள் வருவதில்லை. அலட்சியப்போக்கோடு நடந்து கொள்கின்றனர்.
காயத்ரி (ம.தி.மு.க.,): 4 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வருகிறது. மேலும் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. கொசு மருந்து என்பதே அடிப்பதில்லை.
கமிஷனர்: பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு விவாதம் நடந்தது.