/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; வாழை சேதம் வடமதுரையில் இடிந்து விழந்த சுற்றுச்சுவர்
/
மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; வாழை சேதம் வடமதுரையில் இடிந்து விழந்த சுற்றுச்சுவர்
மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; வாழை சேதம் வடமதுரையில் இடிந்து விழந்த சுற்றுச்சுவர்
மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழை; வாழை சேதம் வடமதுரையில் இடிந்து விழந்த சுற்றுச்சுவர்
ADDED : அக் 06, 2025 04:00 AM

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது.
வளிமண்டல சுழற்சி காரணமாக திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.அதன்படி, திண்டுக்கல்லில் நேற்று காலை வெயில் அடித்தாலும் மதியம் வானில் கருமேகங்கள் சூழந்து 1:30 மணிக்கு லேசான துாரலுடன் பெய்ய தொடங்கிய மழை, கன மழையாக மாறியது.நகரின் முக்கியப்பகுதிகள், ரோடுகளில் மழைநீர் ஆறு போல் ஓடியதால் 2, 4 சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் ஊர்ந்து சென்றன. திண்டுக்கல் ரவுண்ட் ரோடு, மெயின் ரோடு, ஆ.எஸ்., ரோடு, பழநி ரோடு, வத்தலகுண்டு ரோடு, ஏ.எம்.சி., சாலை, ஒத்தக்கண் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் குளம்போல் மழைநீர் தேங்கியது.
வடமதுரை பாடியூர் புதுப்பட்டியில் செயல்படும் தனியார் நிறுவனத்தின் சுற்றுச்சுவர் 10 மீட்டர் துாரத்திற்கு கனமழை பாதிப்பால் இடிந்து விழுந்தது. அருகிலுள்ள வீடுகள் பக்கம் விழுந்ததால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்தனர். சம்பவ நேரத்தில் யாரும் அப்பகுதியில் இல்லாததால் அசாம்பவிதம் தவிர்க்கப்பட்டது.
ஒட்டன்சத்திரம் மதியம் 2:00 மணிக்கு மேல் கனமழை பெய்தது. கே.அத்திக்கோம்பை, காளாஞ்சிபட்டி, பெரியகோட்டை காவேரி அம்மாபட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இம்மழை மானாவாரி பயிர்களுக்கு ஏற்றது என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வத்தலக்குண்டு எம். குரும்பபட்டியில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் பரமன் தோட்டத்தில் 1500 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் ஒடிந்தன.
இதேபோன்று வெள்ளையம்மாள் என்பவரின் வீட்டு கொட்டகை காற்றில் பறந்தது. திடீரென பெய்த மழையால் மக்கள் செய்வதறியாது தவித்தனர்.
அரைமணி நேரம் காற்றுடன் பெய்த மழை பின் ஓய்ந்தது. சிலரது வீடுகளில் இருந்த தகரம் காற்றில் பறந்தது.
தாண்டிக்குடி நேற்று காலை சுட்டெரித்த வெயில் நீடித்த நிலையில் மதியம் 3:30 மணிக்கு கனமழை பெய்தது. தொடர்ந்து 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய நிலையில் பின் மிதமான மழை பெய்து கொண்டே இருந்தது.
பண்ணைக்காடு, மங்களம் கொம்பு, ஆடலூர், கே.சி. பட்டி. பூலத்தூர் கும்பரையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக பெய்தது. தற்போதைய மழை காபி, அவகோடா, ஏலக்காய், மிளகு உள்ளிட்ட மலைத்தோட்ட பயிர்களுக்கு ஏற்றதாக அமைந்தது. கனமழையால் மலைப்பகுதியில் நீடித்த குடிநீர் தட்டுப்பாடு தற்போது சீரானது, மழையை அடுத்து மலைப்பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.