/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நெற்பயிர் விளைச்சலில் பாதிப்பு: விவசாயிகள் வேதனை
/
நெற்பயிர் விளைச்சலில் பாதிப்பு: விவசாயிகள் வேதனை
ADDED : மார் 22, 2025 04:40 AM

திண்டுக்கல்: 'பழநி அ.கலையம்புத்துார் சுற்றுப்பகுதிகளில் பயரிட்டுள்ள நெற்பயிர்களில் மணி பிடிக்காதது விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்' என விவசாய குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார். கொடைக்கானல் வன அலுவலர் யோகேஷ்குமார் மீனா, டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, வேளாண் உதவி இயக்குநர் பாண்டியன், கால்நடை பராமரிப்பு இணை இயக்குநர் ராஜா, கூட்டுறவு இணை பதிவாளர் குருமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
விவசாயிகள் விவாதம்
கலெக்டர்: விவசாயிகள் கோரிக்கை சரி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் குறைகளை சுருக்கமாக தெரிவியுங்கள். மற்றவர்கள் பேசுவதற்கும் வாய்ப்பளிக்க வேண்டும்,
ராமசந்திரன், சாணார்பட்டி: எங்கள் பகுதி குளங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும். இதனால் குளங்களில் நீர் தேங்காமல் தடுக்கிறது. நிலத்தடி நீரையும் பாதிக்கிறது.
வீரப்பன், குஜிலியம்பாறை: வேடசந்துார், குஜிலியம்பாறை பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை தாங்க முடியவில்லை. இறைச்சிகடைகளில் நாய்களுக்கு கழிவுகளை சாப்பிட கொடுப்பதால் பல்வேறு பகுதி தெரு நாய்கள் உணவு தேடி குஜிலியம்பாறைக்கு வருகின்றன. இவைகள் ரோட்டில் நடந்து செல்லும் குழந்தைகளை கடிக்கின்றன.
முத்துசாமி, நிலக்கோட்டை: நிலம் அளவீடு செய்வதற்கு சர்வேயர் அதிகளவில் பணம் செலுத்த கூறுகின்றனர். இதனால் பெரும் பாதிப்பாக இருக்கிறது.
கலெக்டர்: நிலம் அளவீடு செய்வதற்கு அரசு நிர்ணய கட்டணத்தை விட கூடுதலாக பணம் கேட்டால் மாவட்ட நிர்வாகத்தின் பார்வைக்கு கொண்டு வாருங்கள். சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தங்கவேல், தங்கம்மாபட்டி: தங்கம்மாபட்டி சுற்றுப்பகுதிகளில் மயில்கள் தொல்லை தாங்க முடியவில்லை. எதை பயிரிட்டாலும் மயில்கள் சேதப்படுத்துகிறது. வனத்துறை சார்பில் சரணாலயம் அமைத்து கட்டுப்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள்: பழநி வையாபுரி குளம் அ. கலையம்புத்துார், பாலசமுத்திரம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் 1000 ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்துள்ளோம். நெற்கதிர்களில் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் செலவு செய்தும் விளைச்சல் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளோம். ஏக்கருக்கு ரூ.50 இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.