ADDED : ஆக 06, 2025 12:34 AM

நிலக்கோட்டை : நிலக்கோட்டையில் ரூ.1.55 கோடியில் புதிதாக அமைக்கப்பட்ட எரிவாயு தகன மேடை பணி முடிந்து 6 மாதங்களை கடந்தும் செயல்பாட்டிற்கு வராமல் உள்ளது.
நிலக்கோட்டை பேரூராட்சியில் அ.தி.மு.க., ஆட்சியில் எரிவாயு மேடை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தினர். நிலக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ., தேன்மொழி இதற்கான நிதியை ஒதுக்கினார். இதற்கான பணிகள் முடங்கியது . இதை தொடர்ந்து 2022--23ல் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் எரிவாயு தகன மேடைக்காக ரூ.1.55 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து முடிந்துள்ளன. சரியான பாதுகாப்பு வசதி இல்லாததால் மயானத்தில் வைக்கப்பட்ட புதிய ஜெனரேட்டர் திருட்டு போனது. தற்போது ஜெனரேட்டரும் கண்டுபிடிக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது.
செயல்பாட்டிற்கு தயாராக உள்ள நிலையில் ஆறு மாதங்களாக எரிவாயு தகன மேடை பூட்டியே உள்ளது. தகன மேடை செயல்பாட்டிற்கு வந்தால் சுற்று கிராமத்தை சேர்ந்தவர்கள் பயனடைவர். பொதுமக்களின் யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் விரைவில் எரிவாயு தகன மேடையை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை எடுக்கலாமே சவுந்தரபாண்டியன், மார்க்சிஸ்ட் ஒன்றிய குழு உறுப்பினர், நிலக்கோட்டை: பொதுமக்கள் வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட இந்த தகனமேடை செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது. இது தொடர்பாக பொது மக்களிடையே பல்வேறு கருத்து நிலவுகிறது. மாவட்ட நிர்வாகம் விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தயக்கத்திற்கான காரணம் என்ன கருப்புசாமி,பா.ஜ., மாவட்ட பொருளாளர், கொடைரோடு: எரிவாயு தகனமேடை பணி முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தயக்கம் என்ன. ஆளுங்கட்சியினர் வேறு எதுவும் எதிர்பார்த்து உள்ளனரா. எந்த ஒரு அரசு திட்டமும் பொதுமக்களுக்காக தானே. ஆளும் அரசியல்வாதிகளுக்கு இல்லை என்பதை உணர்ந்து எரிவாயு தகன மேடையை செயல்பாட்டிற்கு உடனடியாக கொண்டு வர வேண்டும்.