/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நடப்பதற்கே பயனற்றுபோன கா.பண்ணைப்பட்டி ரோடு
/
நடப்பதற்கே பயனற்றுபோன கா.பண்ணைப்பட்டி ரோடு
ADDED : அக் 05, 2024 04:40 AM

தாடிக்கொம்பு: அகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கா.பண்ணைப்பட்டி செல்லும் தார் ரோடு 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட நிலையில் சேதமடைந்துள்ளதால் ரோட்டை புதுப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திண்டுக்கல் வேடசந்துார் மெயின் ரோட்டில் விட்டல்நாயக்கன்பட்டியில் இருந்து மேற்கே ஒரு கி.மீ., தொலைவில் உள்ளது கா.பண்ணைப்பட்டி. இப்பகுதி மக்களுக்கான ஒரே வழித்தடம்
விட்டல்நாயக்கன்பட்டி அருகே நெடுஞ்சாலையில் இருந்து பண்ணைப்பட்டி செல்லும் தார்
ரோடு . இந்த ரோடு 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தாகும். தற்போது கற்கள் பெயர்ந்து நடப்பதற்கே பயனற்று குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
இந்த ரோட்டின் வழியாகத்தான் பள்ளி ,கல்லூரி மாணவர்கள்,நுாற்பாலை தொழிலாளர்கள் வாகனங்கள் சென்று வருகின்றன. மாலை நேரங்களில் வீடு திரும்பும் மாணவர்களை பெற்றோர் மெயின் ரோட்டுக்கு வந்து அழைத்து செல்லும் நிலை உள்ளது. போதிய தெருவிளக்கு வசதிகளும் இல்லை. பண்ணைப்பட்டி கிராம மக்களுக்கு காவிரி குடிநீர் வசதி இல்லாததால் உவர்ப்பு நீரைத் தான் குடித்து வருகின்றனர். அதே நேரத்தில் ஒரு குடம் ரூ.15 செலுத்தி வாகனங்களில் கொண்டு வரப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரையும் வாங்கி குடிக்கும் நிலையில் உள்ளனர்.
மாவட்டத் தலைநகரான திண்டுக்கல்லை யொட்டியுள்ள பேரூராட்சி பகுதியில் அதுவும் அமைச்சர் தொகுதியில் ரோடு வசதி , காவிரி குடிநீர் வசதி இன்றி உவர்ப்பு நீரை குடித்து மக்கள் வாழ்கின்றனர். இப்பகுதி மக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் போதிய அடிப்படை வசதிகளை செய்து தர முன்வர வேண்டும் .
நடவடிக்கை இல்லை
கே.சரவணன், விவசாயி: பண்ணைப்பட்டி வரக்கூடிய இந்த தார் ரோடு அமைத்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது நடப்பதற்கே பயனற்று உள்ளது. இந்த ரோட்டை புதுப்பிக்க கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. பள்ளி செல்லும் குழந்தைகள் டியூசனுக்கு சென்று விட்டு மாலை நேரங்களில் வீடு திரும்பினால் பெற்றோர் மெயின் ரோட்டுக்குச் சென்று அழைத்து வரும் நிலை உள்ளது. காரணம் ஒரு தெருவிளக்கு வசதி கூட கிடையாது.
சிரமமாக உள்ளது
என்.பழனிச்சாமி, விவசாயி : தார் ரோடு சேதமடைந்துள்ளதால், விவசாயிகள் தங்களது விளை பொருட்களை டூவீலரில் கொண்டு செல்வது கூட சிரமமாக உள்ளது. அதேபோல் சாக்கடை வசதி அறவே கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சிமென்ட் ரோடு கற்கள் பெயர்ந்து நடப்பதற்கே பயனறுள்ளது. பேரூராட்சியில் உள்ள இக்கிராமத்திற்கு ரோடு வசதி, சாக்கடை , சிமென்ட் ரோடு வசதி, காவிரி குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.
குடிநீருக்கு வழி இல்லை
பி.முத்துலட்சுமி, குடும்பத் தலைவி: காவிரி குடிநீர் வரும் எனக் கூறி, மேல்நிலைத் தொட்டி கட்டினர். இன்று வரை காவிரி குடிநீர் விநியோகம் இல்லை. ஊருக்குள் உள்ள மின் டிரான்ஸ்பார்மரை சுற்றி பாதுகாப்பான கம்பி வலை அமைக்க வேண்டும். காவிரி குடிநீர் வசதியை ஏற்படுத்த வேண்டும். போதிய தெரு விளக்கு வசதிகளை செய்து தர வேண்டும்.