ADDED : பிப் 17, 2024 05:43 AM

ஒட்டன்சத்திரம்: பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உப கோயிலான ஒட்டன்சத்திரம் அரசப்பபிள்ளைபட்டி குழந்தை வேலப்பர் கோயில் , நெய்க்காரப்பட்டி பெரிய கலையம்புத்துார் ஐகோர்ட் பத்திரகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஒட்டன்சத்திரம் அரசப்பபிள்ளைபட்டி குழந்தை வேலப்பர் கோயில் கும்பாபிஷேகத்தை யொட்டி பிப்.13 அன்று நன்மங்கல இசை, கணபதி பூஜை, முதற்கால வேள்வி நடந்தது. இரண்டாம் நாள் காலை கனி, கிழங்கு, மூலிகை உள்ளிட்ட பல்பொருள் வேள்வி நடந்தது. அன்று மாலை மூன்றாம் கால வேள்வி நடந்தது. இதை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடந்தது. பழநி கோயில் தேவஸ்தானம் சிவஸ்ரீ அமிர்தலிங்க குருக்கள், சிவஸ்ரீ செல்வ சுப்பரமண்ய குருக்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி , இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையர் லட்சுமி, அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், அறங்காவலர்கள் சுப்பிரமணியன், மணிமாறன், ராஜசேகரன் சத்யா, நகராட்சி தலைவர் திருமலைசாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட வர்த்தக அணி தலைவர் ஆறுமுகம், தொப்பம்பட்டி ஊராட்சி துணைத் தலைவர் தங்கம் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது
நெய்க்காரப்பட்டி: நெய்க்காரப்பட்டி பெரிய கலையம்புத்துாரில் ஐகோர்ட் பத்திரகாளி அம்மன், விநாயகர், கருப்பண்ண சுவாமிகளுக்கு புதிய கோயில் கட்டப்பட்டது. இதன் கும்பாபிஷேக பூஜைகள் பிப்.13 ல் துவங்கியது. இதில் விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் நடைபெற்றது. மாலையில் முதல் கால வேள்வி, காப்பு கட்டுதல், கும்ப அலங்காரம், மங்கல ஆராத்தி நடந்தது. பிப்.14ல் இரண்டாம் கால பூஜை துவங்கியது. மாலை மூன்றாம் கால பூஜைகள் நடைபெற்றது. நேற்று (பிப்.15) அதிகாலை நான்காம் கால பூஜைகள், வேள்வி நடந்தது.யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீர் கோயில் பிரகாரத்தில் வலம் வர அனைத்து விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதை பழநி கோயில் குருக்கள் சுகிசிவம் நடத்தி வைத்தார். நடுத்தெரு கிழக்கு தெரு கோயில் பூசாரிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நெய்க்காரப்பட்டி ஜமாத்தார்கள் சீர்வரிசை எடுத்து வந்து கோயிலில் சமர்ப்பித்தனர்.
சின்னாளபட்டி: பித்தளைப்பட்டி செல்வ விநாயகர், பத்திரகாளியம்மன், மாரியம்மன், நாகம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. காப்பு கட்டுதலுடன் துவங்கிய விழாவில் கிராம தெய்வங்களுக்கு கனி வைத்தல், குடகனாற்றில் இருந்து தீர்த்தம் அழைப்பு, கணபதி ஹோமம், மூலிகை வேள்வியுடன் இரு கால யாகசாலை பூஜைகள் நடந்தது. கடம் புறப்பாட்டை தொடர்ந்து கும்பத்தில் புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. மூலவருக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனையும் நடந்தது. ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது.
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காந்திநகர் உச்சிகாளியம்மன், முத்து மாரியம்மன் கோயிலில்
நேற்று முன்தினம் மங்கள இசை, விநாயகர் வழிபாடு, காப்புக் கட்டுதளுடன் முதற்கால யாக பூஜைகள் தொடங்கியது. நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை ,ஞான உலா நடந்தது. தொடர்ந்து கோபுர கலசங்கள், உச்சிகாளியம்மன், முத்து மாரியம்மன், தெய்வங்களான ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன், ஸ்ரீகருப்பணசுவாமிக்கு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புண்ணிய தீர்த்தங்கள் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. மகா அபிஷேகம், சிறப்பு பூஜைகளும் நடந்தது. உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, எம்.பி., வேலுச்சாமி, தி.மு.க., நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட வர்த்தக அணி தலைவர் ஆறுமுகம், நகர அவைத் தலைவர் சோமசுந்தரம் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை காந்திநகர் ஊர்த்தலைவர் செந்தில்குமார், திருப்பணி குழுவினர், ஊர் மக்கள் செய்திருந்தனர்.