/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அதிகளவில் மரங்களை வெட்டியதால் கொடைக்கானலில் நிலச்சரிவு அபாயம்
/
அதிகளவில் மரங்களை வெட்டியதால் கொடைக்கானலில் நிலச்சரிவு அபாயம்
அதிகளவில் மரங்களை வெட்டியதால் கொடைக்கானலில் நிலச்சரிவு அபாயம்
அதிகளவில் மரங்களை வெட்டியதால் கொடைக்கானலில் நிலச்சரிவு அபாயம்
ADDED : செப் 26, 2024 02:54 AM

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அதிகளவில் வெட்டப்படும் மரங்களாலும், மாற்று விவசாயத்தாலும் நிலச்சரிவு அபாயம் ஏற்படும் நிலை உள்ளது. இதை தடுக்கும் விதம் அதிகளவில் கடுக்காய், ஜாதிக்காய் போன்ற மரங்களை நட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கொடைக்கானலில் சுற்றுலா விடுதிகள், வி.ஐ.பி-.,க்களின் பண்ணை வீடுகள், குடியிருப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றன. இவற்றுக்காக ஆழ்துளை கிணறுகள் முறைகேடாக போடப்படுகின்றன.
இதற்காக மலைச்சாலையில் அடிக்கடி பாறைகள், மண் சரிந்து போக்குவரத்து பாதிக்கப்படுவதும், சிறு சிறு விபத்துகள் சத்தமில்லாமல் நடப்பதும் தொடர்கிறது. கொடைக்கானல் கிளாவரை, மன்னவனுார் பகுதிகளில் சமீபத்தில் நில வெடிப்பும் ஏற்பட்டது.
தேனி மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்தால் போடி மெட்டு மலைப்பாதை, கம்பம்மெட்டு மலைப்பாதைகளில் பாறைகள் உருண்டு விழுகின்றன. மண் சரிவுகள் அடிக்கடி ஏற்படுகின்றன.
எனவே திண்டுக்கல், தேனி மாவட்ட நிர்வாகங்கள் அரசின் கவனத்துக்கு இப்பிரச்னையை கொண்டு செல்ல வேண்டும். பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகிறது.
சுற்றுலா வளர்ச்சி என்ற போர்வையில் வளர்ச்சியை நோக்கி மட்டும் சிந்திக்காமல் வயநாடு போன்ற பேரழிவுகள் ஏற்படாமல் இருக்க என்ன செய்யலாம் என விழித்துக்கொள்ள வேண்டும். சுழலியல் சார்ந்த தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தவும் வேண்டும் என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
மரங்களை தடுப்பணைகளாக மாற்றலாம்
சுற்றுச்சூழல் ஆர்வலரும் பேராசிரியருமான தமிழ்நாயகன் கூறியதாவது:
கொடைக்கானல் நகரில் கட்டப்பட்டுள்ள சில கட்டடடங்கள் உறுதியானது என கூற முடியாது. ஒரு கட்டடத்தின் சரிவு அதன் மேல் உள்ள அனைத்து பகுதிகளையும் இழுத்து புதை குழியில் தள்ளிவிடும். அதிகப்படியான நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளில் உடனடியாக மரங்களையே தடுப்பணைகளாக நெருக்கமாக நட்டு வளர்ப்பதன் மூலம் எதிர்வரும் அபாயத்தை தடுக்க முடியும்.
வானுயர மரங்களை வெட்டி அவ்விடங்களில் பூண்டு, கேரட், வாழை போன்ற பயிர்களை பயிரிடுவதால் மண் தளர்வு ஏற்படுகிறது. விவசாயிகளுக்கும் போதிய விழிப்புணர்வு இல்லை. வனத்துறை சார்பில் ஒவ்வொரு தாலுகாவிற்கும் லட்சக்கணக்கில் மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.
அதேபோல் வனப்பகுதிகளில் கடுக்காய், ஜாதிக்காய் போன்று காடுகளுக்குள் நடக்கூடிய மரக்கன்றுகளை வைத்து ஒவ்வொரு பழங்குடியின கிராமங்களிலும் நர்சரி ஏற்படுத்த வேண்டும். அதற்கு தகுந்த இடவசதிகள் உள்ளன. அதிகப்படியான மரங்களை நடுவதால் மண் அரிப்பை தடுக்கலாம்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ஆர்வமுள்ள தன்னார்வ அமைப்புகள், வனத்துறையினர், கல்லுாரி மாணவர்களை கொண்டு ஒரு கோடி மரக்கன்றுகளை நிலச்சரிவு ஏற்படும் சூழலில் உள்ள பகுதிகளில் நடுவதன் மூலம் கொடைக்கானலை பாதுகாக்க முடியும் என்றார்.

