ADDED : ஆக 11, 2026 08:10 PM
திண்டுக்கல், ஆக.12-
திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட வன அலுவலர் நாகசதீஷ் கிடிஜாலா உத்தரவில் ஜூலை 21ல் புலிகள் கணக்கெடுப்பு பணி துவங்கப்பட்டது. இதற்காக கன்னிவாடி, ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு, சிறுமலை, அய்யலூர், நத்தம், அழகர்கோவில் மற்றும் கொடைக்கானல் வனப்பகுதிகளில் 2 கி.மீ., சுற்றளவுக்கு ஒரு தானியங்கி கேமரா என மொத்தம் 656 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கேமராக்களில் பதிவாகும் புலிகளின் புகைப்படங்களை கொண்டு கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் வத்தலக்குண்டு அடுத்த மணலுார், நிலக்கோட்டை தாலுகா ராஜதானிகோட்டை வனப்பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது தானியங்கி கேமராக்களில் பதிவாகி உள்ளது.
இதுபோல் கேமராவில் பதிவாகும் செந்நாய், மான், காட்டெருமைகளின் புகைப்படங்களை சேகரித்து வனவிலங்குகள் கணக்கெடுப்புக்கு பயன்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
மாவட்டத்தில் புலிகள் கணக்கெடுப்பு பணி ஆக.,21 வரை நடக்கிறது. கணக்கெடுப்பின் முடிவில் திண்டுக்கல் மாவட்ட வனப்பகுதிகளில் புலிகளின் நடமாட்டம், எண்ணிக்கை, வாழ்வியல் சுற்றுவட்டப்பாதை தெரியவரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
