UPDATED : ஆக 11, 2026 08:31 PM
ADDED : ஆக 11, 2026 08:05 PM
அ நிறம் | அளவு
சாணார்பட்டி:வீரசின்னம்பட்டியில் குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
சாணார்பட்டி அருகே வீரசின்னம்பட்டியில் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் அவதியடைந்து வந்தனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
இதனால் ஆத்திரமடைந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஊராட்சி செயலர் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
