/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தெருநாய்கள் பெருக்கத்தை தடுக்க புதிய ஆண்டில் நல்தொருவழி காண்போம்
/
தெருநாய்கள் பெருக்கத்தை தடுக்க புதிய ஆண்டில் நல்தொருவழி காண்போம்
தெருநாய்கள் பெருக்கத்தை தடுக்க புதிய ஆண்டில் நல்தொருவழி காண்போம்
தெருநாய்கள் பெருக்கத்தை தடுக்க புதிய ஆண்டில் நல்தொருவழி காண்போம்
ADDED : ஜன 01, 2025 05:35 AM

வடமதுரை : தெரு நாய் இனப்பெருக்க கட்டுப்பாடு நடவடிக்கைகளில் சில ஆண்டுகளாக அரசு போதிய கவனம் செலுத்தாமல் அலட்சியமாக இருப்பதால் சாதாரண மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். கட்டுபாடின்றி பெருகுவதால் நாய்களின் வாழ்க்கை முறை மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது.
உணவு, வாழ்வுக்கு மனிதனை மட்டுமே நம்பி உள்ள ஒரே விலங்கினம் நாய் மட்டுமே. நன்றி விசுவாசத்திற்கு பெயர் பெற்றவையான இவை நம்நாட்டில் நாகலாந்து தவிர வேறு எங்கும் இறைச்சிக்காக கொல்லப்படுவதில்லை. இதனால் நாய்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய பொறுப்பு அரசின் கடமை. ஆனால் இவ்விஷயத்தில் தொடரப்படும் வழக்குகளில் நீதிமன்றங்கள் பல அறிவுறுத்தல்களை வழங்கினாலும் அரசு நிர்வாகத்தினர் கவனம் செலுத்தவில்லை என்பதே கள நிலவரமாகும். தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அவை அனைத்திற்கும் போதிய உணவு கிடைக்காமல் கோழி, ஆடு, மாடுகளை கடிக்க துவங்குகிறது. நாய்க்கடியால் 'ரேபிஸ்' எனும் கொடிய நோய் ஆபத்தும் உள்ளது. மாநில அளவில் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வீடு, தெருக்களில் வாழ்ந்த நாய்களுக்கு அரசு செலவில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது பலவித தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டன. இதனால் இனப்பெருக்கம் இல்லாமல் இருந்தன. தற்போது ஆண்டுகள் பல கடந்தும் நாய் இனப்பெருக்க கட்டுப்பாடு நடவடிக்கையில் தொய்வு நிலவுகிறது. இத்தகைய நேரங்களில் மக்கள் கடிப்படும் நிலையும் ஏற்படுகிறது.
அடிபட்டு இறக்கிறது
எம்.கோதண்டபாணி, பத்திர எழுத்தர், வடமதுரை: இன பெருக்க கட்டுப்பாடு சிகிச்சை இல்லாததால் ஆங்காங்கே குடியிருப்பு பகுதிகளில் யாருடைய பராமரிப்பிலும் இல்லாமல் வாழும் பெண் நாய்கள் கருத்தரித்து குட்டிகள் ஈனும்போது, ஒரு சில ஆண் நாய் குட்டிகள் மட்டும் வீடுகளில் வளர்க்க எடுத்து செல்லப்படுகின்றன. எஞ்சிய குட்டிகள் அதே பகுதிகளில் சில நாட்கள் வளர்கின்றன. பின்னர் இவற்றை அங்கிருந்து எடுத்து சென்று வேறு பகுதிகளில் விடுகின்றனர். உணவு தேடும் பக்குவம் கூட இல்லாத நிலையில் விடப்படும் நிலையில் பசியால் துடிப்பது சுற்றுப்புற மக்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. பல ஆண்டுகளுக்கு முன் வரை கிராமப்புறங்களில் நாய்கள் குட்டிகளை ஈனும் போது எண்ணிக்கையை கட்டுக்குள் வைக்க ஒரிரு நாட்களிலே சிலவற்றை அழித்துவிடுவர். குப்பையில் உணவு ஏதுவும் கிடைக்குமா என தேடி அலையும் வேதனையான காட்சியை பார்த்து செல்ல வேண்டியுள்ளது. ரோடுகளில் திரியும் நாய்க்குட்டிகள் வாகனங்களில் அடிபட்டு இறப்பதும், போதிய உணவின்றி வாடி வதங்கிய நிலையில் இருக்கும் காட்சிகள் மனிதர்களிடம் மிச்சம் மீதி இருக்கும் இரக்க குணமும் மறைந்துவிடும் நிலையை ஏற்படுகிறது.
கட்டுப்படுத்த வேண்டும்
ஜெ.ராஜரத்தினம், வழக்கறிஞர், வடமதுரை: மனிதர்களால் சாப்பிட தகுதியற்றவை என்ற நிலையில் பிளாஸ்டிக் கேரி பைகளுடன் குப்பைகளில் வீசப்படும் கெட்டுப்போன உணவுகளை நாய்கள் தின்பதால் பலவித பாதிப்புகளை சந்திக்கின்றன. நோய் பாதிப்புடைய நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து நாய் இனத்திற்கு மட்டுமின்றி, மனித இனத்திற்கும் நோய் பரப்பும் நிலை உள்ளது. பேரூராட்சி பகுதிகளிலும் பெண் நாய்களுக்கான கருத்தடை சிகிச்சை வாய்ப்புகளை எளிமையாக்கினால் பெண் நாய்களை வளர்ப்போர் அதிகரிப்பர். வருமுன் காக்கும் நடவடிக்கையாக இனபெருக்க விகிதத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீர்வு
குறிப்பிட்ட பரப்பில் சராசரியாக இவ்வளவு மக்கள் வசித்தால் நிம்மதியாக வாழலாம் என்கிற கணக்கு இருப்பது போலவே, மனிதனை மட்டுமே சார்ந்து வாழும் உயரினமான நாய்களுக்கான எண்ணிக்கை கட்டுப்பாடு அவசியம். நாய்களை இனப்பெருக்க கட்டுப்பாடுகளை சிகிச்சை மூலமே கட்டுக்குள் வைக்க முடியும்.

