/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கண்மாய் காப்போம்- பகுதிக்காக...
/
கண்மாய் காப்போம்- பகுதிக்காக...
ADDED : அக் 18, 2025 04:16 AM

ஒட்டன்சத்திரம்: விருப்பாச்சி பெருமாள் குளத்தில் முளைத்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெருமாள்குளம் 100 ஏக்கர் பரப்பளவுக்கு மேல் இருந்தது. தற்போது ஆக்கிரமிப்பு காரணமாக சுருங்கி காணப்படுகிறது. இந்த குளத்தின் மூலம் 400 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கிறது.பரப்பலாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் தான் இந்த குளத்தின் முக்கிய நீர் ஆதாரம் ஆகும். இந்த குளம் நிரம்பி மறுகால் சென்றால் தான் ஓட்டக்குளம், முத்து சமுத்திரம் கண்மாய், பாப்பான்குளம், காவேரியம்மாபட்டி பெரியகுளம் நீர்நிலைகளுக்கு தண்ணீர் சென்று சேரும் என்பதால் பெருமாள்குளம் 'தாய்க்குளமாக' இருந்து வருகிறது. பரப்பலாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் போது இந்த குளத்திற்கு தான் முதலில் செல்லும்.
சுற்றிய பல கிராமங்களுக்கு செல்வதற்கும், தோட்டத்துச் சாலைகளுக்கும் செல்வதற்கும் குளத்தின் கரைப்பகுதியில் மண்பாதை செல்கிறது. மழைக்காலத்தில் சகதியமாக மாறிவிடுவதால் இந்தப் பாதையை பயன்படுத்த சிரமமாக உள்ளது. கரைகளின் சில இடங்களில் சீமை கருவேல மரங்கள் முளைத்துள்ளது. இவற்றை அகற்றி கரையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குளம் நிரம்பி மறுகால் செல்லும் பாதையை காவேரியம்மாபட்டி விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் புல் பூண்டுகளை அகற்றி சுத்தம் செய்து வருவதுடன் மறுகால் செல்லும் கரைகளையும் பலப்படுத்தி வந்தனர். மறுகால் செல்லும் பாதையில் உள்ள கரைகளை சிமென்ட் கரைகளாக மாற்ற வேண்டும் என்பது இவர்களுடைய நீண்ட நாள் கோரிக்கையாகும். இக்குளத்தில் இருந்து பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீர் செல்லும் வாய்க்கால் சாமியார் புதுார் வரை உள்ளது. இதனால் வாய்க்காலின் பல இடங்கள் சேதமடைந்துள்ளது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருவேலமரங்களை அகற்றுங்க ராஜேந்திரன், விவசாயி, விருப்பாச்சி: மழைக்காலத்தில் குளத்தின் கரைகளின் மேல் உள்ள பாதையை பயன்படுத்த சிரமமாக உள்ளது. இந்த பாதையை மெட்டல் ரோடாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மழைக்காலத்திலும் விவசாயிகள் சிரமமின்றி சென்றுவர வழிவகை கிடைக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் மூன்று போகமும் விளைச்சல் இருந்தது. ஆனால் தற்போது போதுமான தண்ணீர் இல்லாததால் இரண்டு போகம் மட்டுமே வேளாண் தொழில் நடைபெற்று வருகிறது. குளம் , கரைப்பகுதிகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.
மறுகால் வாய்க்காலை சீரமையுங்க பழனிமுத்து, விவசாயி, காவேரியம்மாபட்டி: ஓட்டக்குளம், பாப்பான்குளம், பெரியகுளம் ஆகியவற்றின் நீர் ஆதாரம் பெருமாள்குளம் நிரம்பி மறுகால் செல்லும் தண்ணீர் தான். மறுகால் வாய்க்காலில் முளைத்துள்ள புல் பூண்டுகளை அகற்றி மண் கரைகளுக்கு பதிலாக சிமென்ட் கரைகளை அரசு அமைத்து கொடுத்தால் தண்ணீர் சேதம் இன்றி குளங்களுக்கு சென்றடைய வழிவகை பிறக்கும். வாய்க்காலில் உள்ள செடிகள், காய்ந்து விழுந்த மரங்களை அகற்ற வேண்டும். இதேபோல் குளத்தின் நீர் வரத்து கால்வாயையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.