/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வசதிகளில் புறக்கணிக்கப்பட்ட மன்னவனுார் ஊராட்சி
/
வசதிகளில் புறக்கணிக்கப்பட்ட மன்னவனுார் ஊராட்சி
ADDED : ஜூலை 08, 2025 01:52 AM

கொடைக்கானல்: அடிப்படை வசதிகளில் புறக்கணிக்கப்பட்ட நிலையில் கொடைக்கானல் மன்னவனுார் ஊராட்சி மக்கள் பரிதவிக்கின்றனர்.
மன்னவனுார், கவுஞ்சி, கீழானவயல், மஞ்சம்பட்டி, மூங்கில் பள்ளம் உள்ளிட்ட கிராமங்களை கொண்ட இந்த ஊராட்சியில் உள்ள குளங்கள், நீரோடைகள் சீரமைக்கப்படாமல் விவசாயிகள் பாதிக்கின்றனர்.
நுாறு நாள் வேலை முறையாக வழங்கப்படாமல் முறைகேடுகள் நடந்துள்ளன. ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவில் சிகிச்சையளிக்க டாக்டர் இல்லாத நிலை உள்ளது.
ரோட்டோரத்தை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் புற்றீசல் போல் முளைத்துள்ளது. ஆரம்ப சுகாதார நிலையம், அரசு பள்ளிகளுக்கு குடிநீர் வசதியின்றி மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
சரிவர அள்ளப்படாத குப்பை, சுத்திகரிக்கப்படாத குடிநீர் சப்ளையால் தொற்றுநோய் பரவும் அபாயம்,வார நாட்களில் சுற்றுலா வாகனங்களால் போக்குவரத்து இடையூறு, காட்டுமாடு, பன்றி பிரச்னை, வாய்க்கால் வசதியின்றி ரோட்டில் செல்லும் கழிவு நீர், சேதமடைந்த ரோடு என ஏராளமான பிரச்னையுடன் ஊராட்சி மக்கள் உள்ளனர்.
தண்ணீர் வீணாகிறது
மணிகண்டன், விவசாயி: சப்ளை செய்யப்படும் குடிநீர் மஞ்சள் நிறமாக துாசு கலந்து வருவதால் நோய் தொற்று அபாயம் உள்ளது.
இங்கு சந்தனபாறை, பரப்பலாறு ஆகிய இரு குடிநீர் ஆதாரங்கள் இருந்தும் முறையான பைப் லைன் வசதியின்றி தண்ணீர் வீணாக செல்கிறது. சரிவர குப்பை அள்ளபடாததால் சுகாதாரக்கேடாக உள்ளது.
வாய்க்கால் வசதியின்றி கழிவுநீர் ரோட்டில் செல்லும் அவலம் உள்ளது.நகரில் சுற்றி திரியும் குரங்குகளால் குடியிருப்புவாசிகள் அவதிப்படும் நிலை உள்ளது.
கழிப்பறையின்றி திறந்தவெளி
காமராஜ், விவசாயி: விவசாய தோட்டங்களில் காட்டுமாடு, பன்றி தொல்லைகளால் விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கிறோம்.வார நாட்கள் , சீசன் தருணங்களில் ரோட்டோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மன்னவனுார் கை காட்டிக்குள் வரும் பஸ்கள் கிராமத்திற்குள் நுழையாமல் செல்கிறது. ரோடுகள் சேதமடைந்து உள்ளது. கும்பூர் கீழானவயல் ரோடு வசதியிருந்தும் பஸ் வசதி இல்லாத நிலை உள்ளது.மஞ்சம்பட்டி மூங்கில் பள்ளம் இடையே ரோடு வசதியை ஏற்படுத்த தர வேண்டும்.
கழிப்பறை வசதியின்றி இருபாலரும் ரோட்டோரட்டை நாடும் நிலை உள்ளது. அரசு பள்ளிகளில் இயற்கை உபாதைக்கு கூட தண்ணீரில்லாத நிலை உள்ளது.
சீர் செய்யப்படும்
ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறுகையில்,''உள்ளாட்சி அமைப்புகள் தற்போது இல்லாத நிலையில் ஊராட்சியில் உள்ள குறைபாடுகள் குறித்து பொதுமக்களிடம் குறைகேட்டு சீர் செய்யப்படும்'' என்றார்.