/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
5 நிமிடத்தில் தயாராகும் பொங்கல் பானைகள் ரேஷன் கடை தொகுப்புடன் வழங்க உற்பத்தியாளர்கள் ஆர்வம்
/
5 நிமிடத்தில் தயாராகும் பொங்கல் பானைகள் ரேஷன் கடை தொகுப்புடன் வழங்க உற்பத்தியாளர்கள் ஆர்வம்
5 நிமிடத்தில் தயாராகும் பொங்கல் பானைகள் ரேஷன் கடை தொகுப்புடன் வழங்க உற்பத்தியாளர்கள் ஆர்வம்
5 நிமிடத்தில் தயாராகும் பொங்கல் பானைகள் ரேஷன் கடை தொகுப்புடன் வழங்க உற்பத்தியாளர்கள் ஆர்வம்
ADDED : ஜன 04, 2025 04:28 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் தர்மத்துப்பட்டியில் கைகளால் 5 நிமிடங்களில் தயாரிக்கும் பொங்கல் பானைகளை ரேஷன் கடைகளில் வழங்கும் பொங்கல் தொகுப்புகளில் சேர்த்து வழங்கினால் வாழ்வாதாரம் மேன்மையடையும் என பானை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையில் முக்கிய இடம் பிடிப்பது கரும்பு,பொங்கல் பானை . இந்த பொருட்களை தயாரிக்கும் விவசாயிகள்,உற்பத்தியாளர்கள் ஆண்டு முழுவதும் பொங்கல் பண்டிகைக்காக காத்திருக்கின்றனர். கரும்பு விவசாயிகள் 10 மாதத்திற்கு முன்பே விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். ஜன.14 ல் பொங்கல் பண்டிகை வரும் நிலையில் திண்டுக்கல் தர்மத்துப்பட்டியில் உள்ள பானை உற்பத்தியாளர்கள் பானை தயாரிக்கும் பணியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
1கிலோ,அரை கிலோ அரிசி பொங்கலிடும் வகையில் பானைகள் தயாரிக்கப்படுகிறது. சுழலும் சக்கரத்தில் கைகளால் பானை வடிவமைக்க 5 நிமிடங்களில் தயாராகிறது. இப்பானைகள் ஒரு நாள் முழுவதும் சுடு அறையில் வைத்த பின் விற்பனைக்காக செல்கிறது.
இங்கு தயாராகும் மண் பானைகள் திண்டுக்கல் மட்டுமின்றி கோவை, திருநெல்வேலி,கன்னியாகுமரி போன்ற வெளி மாவட்டம்,கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கும் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். 2023ல் அதிகளவில் மழை பெய்து வெயில் அடிக்காததால் பானை உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டது. 2024ல் சில மாதங்களாக வெயில் சுட்டெரித்ததால் பானை உற்பத்தி சூடு பிடித்துள்ளது.
பொங்கல் பண்டிகை நெருங்குவதால் 10 நாட்களுக்கு முன்பே மக்கள் வாங்கி செல்ல ஆரம்பித்துள்ளனர். ரேஷன் கடைகளில் வழங்கும் பொங்கல் தொகுப்பில் மண்பானைகளை சேர்த்து வழங்கினால் எங்கள் வாழ்வாதாரம் மேன்மையடையும் என இதன் உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
பானை போய் குக்கர்
தர்மத்துப்பட்டி பானை உற்பத்தியாளர் திருப்பதி கூறியதாவது: 25 ஆண்டுகளுக்கு மேலாக இத் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன்.
ரூ.150 லிருந்து பானைகள் விற்பனை செய்யப்படுகிறது. நவீன காலமாக இருப்பதால் எங்கள் வியாபாரம் தற்போது நலிவாக தான் உள்ளது. அனைவரும் குக்கரில் பொங்கல் கொண்டாடும் நிலைக்கு வந்து விட்டதால் பானைகளை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது .
வேறு தொழில் செய்ய முடியாததால் இதையே பின் தொடர்கிறோம். தினமும் 40 பானைகள் செய்ய முடிகிறது. பொங்கல் அல்லாத நேரத்தில் பிழைப்பு நடத்துவதற்காக குழம்பு சட்டி,தீ சட்டிகளை உற்பத்தி செய்கிறேன் என்றார்.