/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இயற்கை வேளாண்மையில் மாஸ் காட்டும் இசை
/
இயற்கை வேளாண்மையில் மாஸ் காட்டும் இசை
ADDED : ஜன 01, 2024 05:52 AM

வடமதுரை சுற்றுவட்டார பகுதியில் இயற்கை வேளாண்மையை மீட்டெடுத்து விவசாயத்தை காப்பாற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை செய்கின்றனர் இசை நிறுவனத்தினர்.
தற்போதைய கால கட்டத்தில் நமது விளை நிலங்களில் விவசாய பணிகள் அதிகளவில் இயந்திரங்களை நம்பியே நடக்கிறது. இவ்வாறான இயந்திர பயன்பாடு இல்லாத,அதிகரிக்காத காலத்தில் விவசாயம் முழுக்கவே கால்நடைகளை சார்ந்தே இருந்தது. கிணறுகளிலிருந்து நீர் எடுத்து நிலத்தில் பாய்ச்சுவது, உழவு என பல அத்தியாவசிய பணிகளும் மாடுகளை நம்பியே இருந்தது. கால்நடைகளின் கழிவுகள் அனைத்தும் மீண்டும் விளை நிலத்திற்கு உரமாக கிடைத்தது. இவை மண்ணிற்கும், மனிதர்களுக்கும் தீங்கு தராதவையாக இருந்ததால், உற்பத்தியாகும் விளை பொருட்கள் மூலம் கேடாகமல் இருந்தது. இதனால் ரசாயன உரங்களுக்கு விவசாயிகள் அதிக பணம் செலவிட தேவையில்லாத நிலையும் இருந்தது. ஆனால் தற்போதைய கால கட்டத்தில் விளை நிலங்களில் இயந்திர பயன்பாடு அதிகரித்து மாடுகள் வளர்ப்பு குறைந்ததால் இயற்கை உரங்கள் கிடைக்காமல் ரசாயன உரங்களை நம்பியே விவசாயம் நடக்கிறது. இது ஒருபுறமிருக்க, ரசாயன உர பயன்பாடின்றி இயற்கை விவசாயத்திற்கென ஒரு தனி உலகம் உருவாகி வருகிறது. இவ்வாறு விளைவிக்கப்படும் பொருட்கள் அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. உள்நாட்டிலும் அதிக விலைக்கு வாங்க தயாராக இருக்கும் வாடிக்கையாளர்களும் உள்ளனர் என்பது ஆறுதல்.
2002ல் துவங்கப்பட்ட இந்தியன் நிலைத்த சமூக செயல்பாட்டு நிறுவனம் இசை வடமதுரை வட்டார விவசாயிகளுக்கு பல்வேறு பயிற்சி, ஆலோசனை முகாம்களை நடத்தி மண்ணிற்கும், மனிதருக்கும் கேடு விளைவிக்காத இயற்கை வேளாண்மையை மீண்டும் விவசாயிகள் பின்பற்ற வைக்கும் பணியை செய்கிறது. இத்துடன் விவசாய செலவை குறைத்து, மதிப்பு கூட்டு முறையில் அதிக லாபம் கிடைப்பதற்கு பல்வேறு திட்ட பணிகளையும் செய்கிறது.
-இயற்கை முறையில் உற்பத்தி
வி.சின்னையா,இசை நிறுவன ஆலோசகர்,திண்டுக்கல்: அய்யலுார் எஸ்.புதுப்பட்டியில் இசை நிறுவனம் சார்பில் விவசாயிகளுக்கு முன்மாதிரியாக மண்புழு உர கிட்டங்கி அமைத்தோம். இங்கு மக்கும் விவசாய கழிவுகளை பயன்படுத்தி மண்புழு உரம் தயாரிக்கும் பணி நடக்கிறது. இதை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குகிறோம். ஒரு ஏக்கருக்கு 300 கிலோ போதுமானது. மண்புழு உரம் தயாரிப்பு குறித்து இப்பகுதி விவசாயிகளை அழைத்து வந்து செயல்முறை விளக்கம், அதனால் ஏற்படும் நன்மை,செலவு குறைவு போன்ற விபரங்களை விளக்குகிறோம். அத்துடன் அவரவர் தோட்டத்திலே ஒரு டன் அளவிற்கு மண்புழு உரம் தயாரிக்கும் தொட்டியும் அமைக்க உள்ளோம். பல ஆண்டுகளுக்கு முன் வரை விவசாயிகள் அனைவரும் செய்த அதே இயற்கை விவசாயத்தை மீண்டும் கொண்டு வருவதே நோக்கம். இதன் மூலம் மனிதருக்கு கேடு தராத விளை பொருட்களை உற்பத்தி செய்ய முடியும். உழவர் உற்பத்தியாளர்கள் சங்கம் அமைத்து விளை பொருட்களுக்கு மதிப்பு கூட்டு முறையில் நல்ல விலை கிடைக்க வழி செய்யப்படும். இப்பணியுடன் மரங்கள் வளர்ப்பதற்கும் முக்கியத்துவம் தருகிறோம். ஒரு பகுதிக்கு மழை பொழிவு தடையின்றி கிடைக்க மரங்களை எண்ணிக்கை அதிகம் இருக்க வேண்டும். மரங்கள் அதிகரிக்கும்போது மழை வளம் அதிகரிக்கும். சுற்றுச்சூழலும் மேம்படும்.
நுண்ணுயிரிகள் மண்ணை வளமாக்கும்
ஜே.செபஸ்தியான், இயற்கை வேளாண்மை பயிற்சியாளர், வையம்பட்டி: இயற்கை விவசாயத்தில் வரப்பு நுண்ணுயிரிகளின் பங்கு முதன்மையானது. விளைநிலம் தரிசாக இருக்கும் காலத்தில் நுண்ணுயிரிகள் வரப்பிற்குள் தஞ்சமடைந்து இருக்கும். விவசாயத்திற்கு நிலத்தை தயார் செய்யும்போது வரப்பின் பக்கவாட்டில் மண்ணை செதுக்கி வயலின் நடுவே வீசும்போது நுண்ணுயிரிகள் நிலத்தின் மையப்பகுதி வரை பரவி மண்ணை வளமாக்கும். இவ்வாறு வரப்பை வெட்டும்போது நிலம் ஈரத்தன்மையுடன் இருக்க வேண்டும். அப்போது தான் வரப்பு நுண்ணுயிரிகள் உயிர்பிழைத்து பல்கி பெருகும். இதை தான் 'வரப்பு உயர, நெல் உயரும்' என கூறுவர். இயற்கை விவசாய முறையில் அனைவரும் குறைந்த செலவில் எளிதாக ஜீவாமிர்தம் தயாரித்து பயன்பெறலாம்.
இதற்காக ஒரு 200 லிட்டர் பேரலில் 10 கிலோ சாணம், 3 முதல் 5 லிட்டர் கோமியம், ஒரு கிலோ நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம், 2 கிலோ பயறு வகை மாவு, நுண்ணுயிரிகள் இருக்கும் வரப்பு மண் அரை கிலோ, மீதம் தண்ணீர் நிரப்பி கொள்ள வேண்டும். முதல் இரண்டு நாளில் காலை, மதியம், மாலை என தலா 50 முறை கலவையை கலக்க வேண்டும். இதன் மூலம் உள்ளே உருவாகியிருக்கும் மீத்தேன் வாயு வெளியேறும்.
3வது நாளில் கலக்காமல் அப்படியே விட வேண்டும். பின்னர் 4வது நாள் முதல் 11வது நாளுக்குள் இந்த கரைசலை ஒரு ஏக்கர் நிலம் பயன்பெறும் வகையில் பயன்படுத்தி முடிக்க வேண்டும். தாமதமாக செய்தால் நுண்ணுயிரிகள் இறந்துவிடும். இதை நெல், காய்கறி, மர வகை என அனைத்து வகை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம். செலவு குறைவு, விளை நிலங்கள் வளமாகும். விளை பொருட்களில் கேடும் இருக்காது.