/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆதிதிராவிட பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை அமைச்சர் மதிவேந்தன் தகவல்
/
ஆதிதிராவிட பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை அமைச்சர் மதிவேந்தன் தகவல்
ஆதிதிராவிட பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை அமைச்சர் மதிவேந்தன் தகவல்
ஆதிதிராவிட பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை அமைச்சர் மதிவேந்தன் தகவல்
ADDED : ஆக 11, 2025 04:00 AM

திண்டுக்கல்: ''ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.
திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலை கல்லுாரியில் நடந்த உலக பழங்குடியினர் தின விழாவில் பழங்குடியின மக்களுக்கான 'தொல்குடி' இணையதளத்தை தொடங்கி வைத்த அவர் பேசியதாவது: தொல்குடி திட்டத்தின் முக்கிய நோக்கம் பழங்குடியினரை கல்வி, கலாசாரம், பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய செய்வதே ஆகும். பழங்குடியின மக்கள் சாகுபடி செய்யும் விவசாய பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி சந்தைப்படுத்துவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உலக பழங்குடியினர் தினத்தின் கருப்பொருளாக செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி எவ்வாறு பழங்குடியினரின் உரிமைகளை பாதுகாப்பது, எதிர்காலத்தை தீர்மானிப்பது என்பதை மையப்படுத்தி 'தொல்குடி' இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் மொழி, பண்பாடுகளை இணையவழியில் பாதுகாக்க ரூ.2 கோடியில் பணிகள் நடக்கிறது என்றார்.
ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் செயலாளர் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். கலெக்டர் சரவணன் வரவேற்றார். பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை, எம்.பி., சச்சிதானந்தம், எம்.எல்.ஏ., செந்தில்குமார், மாநில பழங்குடியினர் நல வாரிய தலைவர் கனிமொழி முன்னிலை வகித்தனர்.
இதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கொடைக்கானலில் உள்ள உண்டு உறைவிட பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தேவை குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஒட்டன்சத்திரம் அருகே வடகாடு பகுதியில் ஆதிதிராவிடர் குடியிருப்பு கட்டட பணிகளை ஆய்வு செய்து கட்டுமான பணிகளை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் நல்ல முறையில் உள்ளது. அதனை தற்போது மேம்படுத்திக் கொண்டு இருக்கிறோம். வரும் காலங்களில் ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பழங்குடியின மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது என்றார்.

