ADDED : நவ 07, 2026 06:38 PM
திண்டுக்கல்: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, காற்று திசை மாறுபாடு காரணமாக திண்டுக்கல் உள்பட சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது.
தீபாவளி சமயத்தில் மழைக்கான வாய்ப்பு இருப்பதை அறிந்து திண்டுக்கல்லில் தற்காலிக கடைகள் அமைத்துள்ள ரோட்டோர வியாபாரிகள், வணிகர்கள் கவலை அடைந்தனர். நேற்று காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. கனமழை வரும் எதிர்பார்த்த நிலையில் திடீரென வெயில் சுட்டெரிக்க துவங்கியதால் வியாபாரிகள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
மாலை 4:30 மணிக்கு மீண்டும் வானம் மேகமூட்டத்துடன் மழைக்கு அச்சாரமிட்டது. சில நிமிடங்கள் சாரல் மழை துாறிய நிலையில் 5:15 மணிக்கு மேல் மிதமான மழை பெய்தது. 15 நிமிடங்கள் பெய்த மழையால் பகல் வெப்பம் தணிந்து பூமி குளிர்ந்தது. இதற்கிடையில் மழை காரணமாக சிறிது நேரம் தீபாவளி விற்பனை டல்லடித்தது. தொடர்ந்து இரவில் வழக்கம்போல் வியாபாரம் நடந்தது.
மாவட்டத்தில் கொடைக்கானல், வத்தலக்குண்டு, சின்னாளப்பட்டி உள்ளிட்ட பிற பகுதிகளிலும் லேசான மழை பெய்தது.
