UPDATED : நவ 08, 2026 12:00 AM
ADDED : நவ 07, 2026 07:00 PM

வேடசந்துார்: வேடசந்துார் நாகம்பட்டி அருகே உள்ள தடுப்பணையை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லவுகனம்பட்டி, நாகம்பட்டி வழியாக செல்லும் சிற்றோடை வேடசந்துார் அருகே குடகனாற்றில் கலக்கிறது. மழைக்காலங்களில் இந்த ஓடையில் நீர் பெருக்கெடுத்து ஓடும். திண்டுக்கல் கரூர் நெடுஞ்சாலை பாலம் அருகே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பணை கட்டப்பட்டது. தற்போதும் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையில் தடுப்பணை சிதிலமடைந்துள்ளது. விவசாயிகளின் நலன் கருதி இந்த தடுப்பணையை விரைந்து புனரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நாகம்பட்டி விவசாயி சுப்பிரமணி கூறுகையில், 'இந்த தடுப்பணையில் தற்போதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதன் மூலம் சுற்றுப்பகுதி விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகளுக்கு போதிய நீராதாரம் கிடைக்கிறது. ஆனால் தடுப்பணை சேதமடைந்து உள்ளதால் கவலை அளிக்கிறது. விரைந்து இதே இடத்தில் புதிய தடுப்பணையை கட்ட வேண்டும்' என்றார்.
