/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கண்காணிப்பு அவசியம்: மாவட்டத்தில் திரும்பும் திசையெங்கும் போஸ்டர்கள்
/
கண்காணிப்பு அவசியம்: மாவட்டத்தில் திரும்பும் திசையெங்கும் போஸ்டர்கள்
கண்காணிப்பு அவசியம்: மாவட்டத்தில் திரும்பும் திசையெங்கும் போஸ்டர்கள்
கண்காணிப்பு அவசியம்: மாவட்டத்தில் திரும்பும் திசையெங்கும் போஸ்டர்கள்
ADDED : ஏப் 10, 2025 06:19 AM

மாவட்டத்தில் பிறப்பு முதல் இறப்பு வரையில் ஒவ்வொரு நிகழ்வுகளையும் 'போஸ்டர்' அடித்து விளம்பரப்படுத்தி கொள்ளும் கலாசாரம் பெருகி விட்டது. சாலையில் நடந்து செல்லும்போது திரும்பும் திசையெல்லாம், பிறந்தநாள் விழா, காதுகுத்து, மஞ்சள் நீராட்டு, திருமணம், கண்ணீர் அஞ்சலி, அரசியல், சினிமா விளம்பரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை மையப்படுத்தி சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. அந்த வகையில் சுவரொட்டிகள், பேனர்கள் மூலம் பொது இடங்கள், பொது சொத்துக்களை சிதைப்பதை பலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
ரோட்டோராமாக இருக்கும் மின்பெட்டிகள் போஸ்டர்களின் அடுத்த குறியாக உள்ளது.
விளம்பரம் செய்வதற்காக அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைபோல் பயன்படுத்துகின்றனர். இதனால் மின் பெட்டியில் பழுது நீக்க வரும் மின் ஊழியர்கள் மின் பெட்டிகளின் கதவை திறப்பதற்கு முன்பாக அதில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களை முதலில் அகற்றுவதற்குள் போதும் போதுமென ஆகிவிடுகிறார்கள். இதுபோன்ற பொது சொத்துகள், பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டுவதால் அரசு அதிகாரிகளின் பணிகளும் பாதிக்கப்படுகின்றன.
குறிப்பாக அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் கணக்கில்லாமல் போகிறது. அரசியல் தலைவரின் பிறந்தநாள் தொடங்கி சிறு பதவி பெற்றால் கூட போஸ்டர்களால் நகரை நிரப்பி விடுகின்றனர். இது தெருபலகை, ஊர் பலகை தொடங்கி ஒரு இடம் விடாமல் தொடர்கிறது. வெளியூர்களிலிருந்து வருவோர் இந்த பகுதிதான் என்பதை காண முடியாத அளவிற்கு முகவரியை மறைத்து விடுகின்றனர்.
சுவரில் போஸ்டர் ஒட்டவோ விளம்பரம் செய்யவோ கூடாது. மீறினால் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படும் என எழுதப்பட்ட எச்சரிக்கை வாசகத்தின் அருகிலே போஸ்டர்களை ஒட்டுவதும் இயல்பாக நடக்கிறது.