/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மொசைக் வைரஸ் தாக்குதல் சவ்சவ் விவசாயம் பாதிப்பு
/
மொசைக் வைரஸ் தாக்குதல் சவ்சவ் விவசாயம் பாதிப்பு
ADDED : செப் 21, 2025 01:58 AM

தாண்டிக்குடி:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாண்டிக்குடி மலைப்பகுதியில் மொசைக் வைரஸ் தாக்குதலால் சவ்சவ் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
தாண்டிக்குடி மலைப்பகுதியில் ஏராளமான ஏக்கரில் சவ் சவ் விவசாயம் செய்யப்படுகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கிய சவ்சவ் விவசாயத்தில் மொசைக் வைரஸ் பாதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. வைரஸ் பாதிப்பால் பசுமையான இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காய்கள் வளர்ச்சி அடையாமல் உதிர்வது, பூ, பிஞ்சுகள் உதிர்வது உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனால் இவ்விவசாயம் அழிவை சந்தித்து வருகிறது.
இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து விவசாயத்தை காக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்த போதும் தோட்டக்கலைத்துறையினர் கண்துடைப்பாக சில நடவடிக்கையை மட்டும் எடுக்கின்றனர். இது ஒரு புறம் இருக்க மறுபுறம் காட்டுப்பன்றிகள் தாக்குதல் என விவசாயம் அழிவின் விளிம்பிற்கு சென்றுள்ளது. சவ்சவ் விவசாயத்தை மொசைக் வைரஸ் பாதிப்பில் இருந்து மீட்டெடுக்க இனியாவது தடுப்பு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கொள்ள வேண்டும்.
தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய தலைவர் பாலகும்பகன் கூறியதாவது: சவ்சவ் விவசாயத்தில் பரவி வரும் மொசைக் வைரஸ் பாதிப்பை தவிர்க்க நுண்ணூட்ட சத்து தெளிப்பு மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யலாம். மேலும் விவசாய நிலங்களில் மொசைக் வைரஸ் பாதித்த செடிகளை அகற்றி அவற்றை தீயிட்டு அழிப்பதும், நிலத்தை சுத்தமாக வைத்திருப்பதன் மூலமும் இப்பாதிப்பிலிருந்து தவிர்க்கலாம். பொறி வைத்தல், ஒட்டு பசை மூலம் வெள்ளை ஈ, அசுவினி பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். வைரஸ் பாதிப்பில் இருந்து விவசாயத்தை மீட்டெடுக்க தொடர் ஆய்வுகள் நடந்து வருகிறது என்றார்.