/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கழிவுநீர் தேக்கத்தால் கொசு...போயே போச்சு துாக்கம் -ஒட்டன்சத்திரம் 12வது வார்டில் தொடரும் அவதி
/
கழிவுநீர் தேக்கத்தால் கொசு...போயே போச்சு துாக்கம் -ஒட்டன்சத்திரம் 12வது வார்டில் தொடரும் அவதி
கழிவுநீர் தேக்கத்தால் கொசு...போயே போச்சு துாக்கம் -ஒட்டன்சத்திரம் 12வது வார்டில் தொடரும் அவதி
கழிவுநீர் தேக்கத்தால் கொசு...போயே போச்சு துாக்கம் -ஒட்டன்சத்திரம் 12வது வார்டில் தொடரும் அவதி
ADDED : ஜூலை 05, 2025 03:08 AM

ஒட்டன்சத்திரம்: வடிகால் வசதி குறுகலாக இருப்பதால் மழைகாலத்தில் கழிவுநீர் தேக்கத்தால் கொசுக்கள் உற்பத்தி,நாய்களால் போச்சு துாக்கம் ,சேதம் அடைந்த ரோடுகள் என ஒட்டன்சத்திரம் நகராட்சி 12 வது வார்டில் தீர்க்கவேண்டிய பிரச்னைகள் அதிகம் உள்ளன.
அண்ணா நகர், சொசைட்டி காலனி, சம்சுதீன் காலனி, வீரசின்னம்மாள் கோயில் தெரு, திண்டுக்கல் பழநி ரோடு தெற்குப்பகுதி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் சம்சுதீன் காலனியில் தெரு நாய்கள் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் பயத்துடன் தெருக்களில் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இரவு நேரங்கள் அவை ஒன்று சேர்ந்து கூச்சலிட்டவாறு உள்ளதால் துாக்கத்தை கெடுக்கிறது. அண்ணாநகர், சம்சுதீன் காலனி பகுதி சில தெருக்களில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குகிறது. சாக்கடையை ஆழப்படுத்தி அகலப்படுத்தி மழைநீர் தேங்காமல் இருக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும். இங்குள்ள தரை மேல் தொட்டி பயன்பாடு இல்லாமல் உள்ளது.
தேவை தெரு விளக்குகள்
ஏ.முகமது இஸ்மாயில், கடை உரிமையாளர், சம்சுதீன் காலனி: பழநி ரோடு சென்டர் மீடியனில் போதுமான தெரு விளக்குகள் அமைக்க வேண்டும். சென்டர் மீடியனில் வைக்கப்பட்டுள்ள செடிகள் உயரமாக இருப்பதால் அடுத்த பக்கம் வரும் வாகனங்கள் தெரிவதில்லை .இதனால் ரோட்டை கடக்கும் போது விபத்து நடக்கிறது. செடியின் உயரத்தை குறைக்க வேண்டும். சாக்கடைகள் ஆழமாகவும், அகலமாகவும் அமைக்கப்பட்டால் கழிவுநீர் தேங்காமல் செல்லும்.
குடிநீர் பிரச்னை இல்லை
ஜலாலுதீன், ஓய்வு அரசு ஊழியர் ,சம்சுதீன் காலனி:போதுமான குழாய்கள் அமைத்து வார்டு முழுவதும் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் குடிநீர் பிரச்னை இல்லை. குழாய் அமைக்கும் பணிக்காக சேதப்படுத்தப்பட்ட ரோடுகளால் வாகனங்களை இயக்க சிரமமாக உள்ளது. இதனை விரைந்து சீரமைக்க வேண்டும். வார்டு பகுதியில் அடிக்கடி கொசு மருந்து அடிக்க வேண்டும். சம்சுதீன் காலனியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.
கோரிக்கைகள் நிறைவேற்றம்
முகமது மீரான், கவுன்சிலர் (காங்.,) : சம்சுதீன் காலனி, சொசைட்டி காலனி பகுதிகளில் தார் ரோடு போடப்பட்டுள்ளது. சொசைட்டி காலனி பகுதியில் வடிகால் அகலப்படுத்தப்பட்டு இரண்டு சிறு பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் மழை நீர் தேங்கும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. நல்ல தண்ணீர் போதுமான அளவிற்கு விநியோகம் செய்யப்படுவதால் தரை மேல் உள்ள தொட்டிகள் பயன்படுத்தப்படாமல் உள்ளது. நகராட்சி குப்பை கிடங்கு பயன்பாட்டில் உள்ளதால் தினந்தோறும் குப்பை அள்ளப்படுகிறது. அமைச்சர் பரிந்துரையின் பேரில் சொசைட்டி காலனியில் ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது என்றார்.