/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கவனிப்பாரில்லாத பாலங்களில் வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
/
கவனிப்பாரில்லாத பாலங்களில் வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
கவனிப்பாரில்லாத பாலங்களில் வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
கவனிப்பாரில்லாத பாலங்களில் வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
ADDED : ஆக 08, 2024 05:17 AM

மாவட்டத்தில் நகரங்கள், கிராமங்களை இணைக்கும் வகையில் ரோடுகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மாநில நெடுஞ்சாலை, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் சார்பில் அமைக்கப்படுகின்றன. இவற்றில் ஆங்காங்கே மழை நீர், வடிகால், பாசன வாய்க்கால் நீர் கடந்து செல்ல வசதியாக சிறுபாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
இவற்றில் தேசிய, மாநில நெடுஞ்சாலை ரோடுகளில் கட்டப்படும் பாலங்களையொட்டி கப்பி கற்களை கொண்டு நிரப்பி எதிர்காலத்தில் மண் இறுக்கம் ஏற்பட்டு பள்ளமாவதை தடுக்க அக்கறை காட்டுகின்றனர். அப்படியே மண் இறுக்கம் ஏற்பட்டாலும் சில வாரங்களில் அவ்விடங்களில் தார் கலவை கொண்டு சீரமைப்பு பணி செய்கின்றனர். ஆனால் கிராமப்புற ரோடுகளில் ஒப்பந்த அடிப்படையில் ரோடு அமைத்த பின்னர் அடுத்த 5 ஆண்டுகள் கழித்து ரோடு புதுப்பித்தல் பணி நடக்கும் வரை கவனிப்பில்லாத நிலை உள்ளது. ஏராளமான இடங்களில் வேகத்தடைகளை அமைக்கின்றனர்.
வேகத்தடை இருப்பதை வாகன ஓட்டிகளுக்கு உணர்த்தும் வகையில் வெள்ளை நிறத்தில் 'தெர்மோ பிளாஸ்ட் சிமென்ட் கோட்டிங்' பூச்சும் இருப்பதில்லை. இதனால் வேகத்தடை இருப்பது தெரியாமல் வழக்கமான வேகத்தில் பயணிக்கும் டூவீலர் ஓட்டிகள் தடுமாறி விபத்தில் சிக்குகின்றனர்.
இந்த கொடுமை ஒருபுறமிருக்க கிராம ரோடுகளில் புதிய பாலம் கட்டும் இடங்களில் போதுமான அளவில் மண்ணை சமன் செய்வதில்லை.
இதனால் சில வாரங்களிலே பாலத்தையொட்டிய பகுதிகளில் மண் இறுக்கம் ஏற்பட்டு பள்ளம் ஏற்படுகிறது. மேலும் பல இடங்களில் பாலம் மேடாகவும் அதை ஒட்டி ரோடு பள்ளமாக இவையும் அதிகாரபூர்வமற்ற வேகத்தடைகளாக மாறிவிடுகின்றன. வாகனங்கள் கடக்கும்போது கடும் அதிர்வும், பேரிரைச்சலும் சில இடங்களில் தடுமாற்றம் ஏற்பட்டு விபத்துக்களும் நடக்கின்றன.
இவ்விடங்களில் முன்னுரிமை அடிப்படையில் சீரமைப்பு பணிகள் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.