/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தப்ப முயன்ற கொலை கைதி சுட்டு பிடித்தது போலீஸ்
/
தப்ப முயன்ற கொலை கைதி சுட்டு பிடித்தது போலீஸ்
ADDED : அக் 05, 2024 01:15 AM

திண்டுக்கல்:திண்டுக்கல், பேகம்பூரை சேர்ந்தவர் முகமது இர்பான், 24. இவர், செப்., 28ல் டூ - வீலரில் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே சென்ற போது, கொலை கும்பல் வழிமறித்து வெட்டிக்கொலை செய்தது.
வடக்கு இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில், 2023ல் நடந்த பட்டறை சரவணன் கொலையில் முகமது இர்பானுக்கு தொடர்பிருப்பது தெரிந்தது.
பழிக்குப்பழியாக பட்டறை சரவணனின் ஆதரவாளர்கள் முகமது இர்பானை கொலை செய்தது அம்பலமானது. தொடர்ந்து, கொலையாளிகளான முத்தழகுபட்டி ரிச்சர்ட் சச்சின், 26, உள்ளிட்ட நால்வரை போலீசார் கைது செய்தனர்.
முத்தழகுபட்டியை சேர்ந்த எடிசன்ராஜ், 25, சைமன்செபஸ்தியார், 23, இருவரும் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
விசாரணையில், திண்டுக்கல் மாலப்பட்டி அருகே கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக ரிச்சர்ட் சச்சின் தெரிவித்தார்.
இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி தலைமையிலான போலீசார், ரிச்சர்ட் சச்சினை அழைத்துக் கொண்டு, மாலப்பட்டி பகுதிக்கு சென்றனர். அப்போது, அங்கிருந்த அரிவாளால் போலீஸ்காரர் அருண் கையில் வெட்டிய ரிச்சர்ட் சச்சின் தப்ப முயன்றார்.
இதை கண்ட இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி, ரிச்சர்ட் சச்சின் வலது காலில் துப்பாக்கியால் சுட்டார்.
காயமடைந்த போலீஸ்காரர் அருண், ரிச்சர்ட் சச்சின் இருவரையும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.