/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மழையை அதிகரிக்க மரங்களை பராமரிக்கும் இயற்கை ஆர்வலர்
/
மழையை அதிகரிக்க மரங்களை பராமரிக்கும் இயற்கை ஆர்வலர்
மழையை அதிகரிக்க மரங்களை பராமரிக்கும் இயற்கை ஆர்வலர்
மழையை அதிகரிக்க மரங்களை பராமரிக்கும் இயற்கை ஆர்வலர்
ADDED : நவ 25, 2024 05:40 AM

வடமதுரை சுற்று வட்டார பகுதிகளில் மழைப்பொழிவை அதிகரிக்கும் வகையில் தன் சொந்த முயற்சியில் மரக்கன்றுகளை நடவு செய்கிறார் அதே பகுதியை சேர்ந்த தையல் கடைக்காரர்.
வடமதுரை பகுதியில் மழை பொழிவு என்பது மாவட்டத்தின் மற்ற பகுதிகளை காட்டிலும் குறைவாகவே உள்ளது. ஆனால் மலைப் பகுதிகளில் பெய்யும் மழையளவை கொண்டு மாவட்ட சராசரி மழை அளவை கணக்கிடும்போது ஒட்டு மொத்த மாவட்டமே ஓரளவு மழை பலன் பெற்றதை போன்ற தோற்றத்தை காட்டுகிறது.
தொடர்ந்து வறட்சி பாதிக்கும் பகுதியாக நீடிக்க இங்கிருந்த மரங்கள் பெருமளவில் அழிக்கப்பட்டதும், தறபோதும் அழிக்கப்பட்டு வருவதுமேயாகும்.
அழிக்கப்பட்ட மரங்கள் எண்ணிக்கையை மீண்டும் உருவாக்கும் நடவடிக்கையாக தற்போது அரசு சார்பில் ஆண்டுதோறும் நடவு செய்யப்பட்டாலும் முறையாக பாதுகாத்து வளர்க்காததால் மரக்கன்று மரமாக மாறாமலே அழிகின்றன. இவற்றை காப்பாற்ற வடமதுரை மொட்டணம்பட்டி தையல் கடைக்காரர் பி.பலராமன் என்பவர் ஈடுபடுகிறார்.
வடமதுரை அருகே சிட்டம்பட்டியில் பல ஆண்டுகளாக கடை நடத்தும் இவர் தனது சொந்த செலவில் சிட்டம்பட்டி, மொட்டணம்பட்டி பகுதியில் இடங்களில் மரங்களை வளர்த்தார்.
இவற்றில் வேம்பு, புங்கம், கொன்னை, வாகை, செரி, அடுக்கரளி, மலைக்கொன்னை, ஆலம், அரசு என நிழல் தருபவை, 40 தென்னை, 20 புளி ஆகியன நீண்ட காலத்திற்கு கிராம பொது நிதிக்கும் பலன் தரும் மரங்கள்.
மரக்கன்றுகளை நடவு செய்ததுடன் கடமை முடிந்தது என கருதாமல் ஆடு, மாடுகளால் பாதிப்பு ஏற்படாத வகையில் கூண்டுகளையும் அமைத்தார். சில ஆண்டுகளுக்கு முன் கடும் வறட்சியில் வேடசந்துார் தாலுகாவில் மா, கொய்யா, தென்னை என மரங்கள் ஆயிரக்கணக்கில் காய்ந்து கருகி போன நேரத்தில் விலைக்கு தண்ணீரை வாங்கி ஊற்றி மரக்கன்றுகளை காப்பாற்றினார். இவரது விடா முயற்சியின் பலனாக இன்று கிராமத்தில் ஏராளமான மரங்கள் வானுயர வளர்ந்து பச்சை பசேல் தன்மையையும், ரோட்டோரங்களில் நிழலை, மக்கள் சுவாசிக்க உதவும் ஆக்ஸிஜனை வழங்கி வருகிறது.
மரங்களை காப்பாற்றினேன்
பி.பலராமன், தையல் கடைக்காரர், மொட்டணம்பட்டி: நிழல் தரும் மரங்கள் மட்டுமின்றி, கிராமத்திற்கு வருமானம் கிடைக்கும் வகையில் பலன் தரும் மரங்களையும் நடவு செய்து காப்பாற்றி முழுமையாக மரமாக வளர்த்தேன்.
பல இடங்களில் மக்கள் அமர்வதற்காக சிமென்ட் பலகைகளால் இருக்கைகள் அமைத்தேன்.
விவசாயிகள் பாதி பணம், எனது பணம் பாதி என பங்களிப்பு செய்து ஒன்றரை கி.மீ. துாரத்திற்கு புதிதாக மண் ரோடு உருவாக்கினேன். மழை நீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் தவிர்ப்பு போன்ற விழிப்புணர்வு வாசகங்களுடன் 5 இடங்களில் தெருக்களின் பெயர் விபர பலகைகள் அமைத்துள்ளேன். 2018 ல் வீசிய கஜா புயலால் நான் வளர்த்த பல மரங்கள் சாய்ந்துபோனதில் எனக்கு ஏற்பட்ட வேதனை இன்றளவும் மறையவில்லை என்றார்.