ADDED : ஏப் 17, 2025 06:16 AM

பழநி: சாலை ஆக்கிரமிப்பு,குளத்துரோடு இணைப்பு சாலை இல்லாமல் அவதி என பழநி நகராட்சி 25 வது வார்டு மக்கள் தவிக்கின்றனர்.
சூளைமேட்டு தெரு,தம்புரான் தோட்டம், கோட்டைமேட்டு தெரு, அன்சாரி வீதி, எருமைக்கார தெரு, காமராஜர் வீதி, காந்தி மார்க்கெட் ரோடு, பட்டத்து விநாயகர் கோவில் ரோடு ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த வார்டில் காமராஜர் வீதியிலிருந்து குளத்து ரோடுக்கு இணைப்புச் சாலை இல்லாததால் இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பொதுமக்கள் சென்றுவர சிரமம் அடைகின்றனர். இதை கருதி இங்கு இணைப்பு சாலை அமைப்பது அவசியமாகிறது .சாலையோர ஆக்கிரமிப்பாலும் இங்குள்ளோர் பாதிக்கின்றனர்.
கசிவால் சேதமாகும் குழாய்
கணேசன், ரெடிமேட் வியாபாரம், கோட்டைமேட்டு தெரு: வார்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் போர்வெல் பைப்பில் இருந்து தண்ணீர் கசிவு ஏற்பட்டு குழாய் சேதமடைகிறது. தண்ணீர் வீணாவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாய் தொல்லை அதிகம் உள்ளதால் இதனை கட்டுப்படுத்த வேண்டும்.
ஆக்கிரமிப்பால் அவதி
கருப்பசாமி, பா.ஜ., நகர செயலாளர், அன்சாரி வீதி: காந்தி ரோடு பழைய தாராபுரம் பிரிவில் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளது. குறிப்பாக மக்கள் நடந்து செல்லும் சாலையை ஆக்கிரமித்து கடை நடத்தி வருகின்றனர். இதன் மீது நகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின் இணைப்பு இல்லை
நாராயணன், ஆட்டோ ஓட்டுநர், எருமைக்கார தெரு: கலைஞர் படிப்பகம் திறக்கப்பட்டு பல நாட்கள் ஆன நிலையில் இதுவரை கட்டடத்திற்கு மின்சார இணைப்பு வழங்கவில்லை. நாளிதழ்கள் எதுவும் வருவதில்லை. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாய் தொல்லை
ஜன்னத்துல் பிர்தோஸ், கவுன்சிலர் (அ.தி.மு.க.,): குளத்து ரோடு பகுதியில் இருந்து காமராஜர் சாலைக்கு இணைப்பு சாலை அமைக்க வேண்டும். இதனால் கிராமப்புற விவசாயிகள், வியாபாரிகள் ,ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகள் எளிதில் வந்து செல்ல முடியும். நாய் தொல்லை குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன் . காந்தி ரோட்டில் குறிப்பிட்ட பகுதியில் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. அதனை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் , போலீசாரிடம் வலியுறுத்தி உள்ளேன்.