ADDED : பிப் 23, 2024 06:09 AM
குப்பை அகற்றம்
திண்டுக்கல்: மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவில் சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் திண்டுக்கல் பூ மார்க்கெட் உள்பகுதியில் குவிக்கப்பட்ட குப்பை,பூக்கழிவுகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். 2டன் குப்பை அகற்றப்பட்டது. குப்பை தேங்காமல் தடுக்கும் வகையில் தினமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரினர்.
11 குடிநீர் இணைப்புகள்'கட்'
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் குடிநீர் கட்டணம் செலுத்தாதவர் குடிநீர் இணைப்புகளை துண்டிக்க கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார். அதன்படி மாநகராட்சி அலுவலர்கள் மெங்கில்ஸ்ரோடு,கோவிந்தாபுரம்,முத்தழகுபட்டி பகுதிகளில் உள்ள வீடுகளில் 11 குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர்.
கலெக்டர் ஆய்வு
நத்தம் : -நத்தம் பகுதியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் சின்னமுளையூரில் பால் உற்பத்தியாளர் சங்கத்தில் கொள்முதல் பாலின் தரம் , பதிவேடுகளை கலெக்டர் பூங்கொடி ஆய்வு செய்தார். அங்கு நடந்த கால்நடை மருத்துவ முகாமை பார்வையிட்ட கலெக்டர் ராவுத்தம்பட்டி, முளையூர், எர்ரமநாயக்கன்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் காலை உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.
காங்., தலைவருக்கு வாழ்த்து
திண்டுக்கல் :தமிழ்நாடு காங்., தலைவராக பொறுப்பேற்ற செல்வப் பெருந்தகையை திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்., சார்பில் மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமையில் கட்சியினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். கிழக்கு மண்டல தலைவர் கார்த்திக் ,மாவட்டத் துணை தலைவர்கள்காஜா மைதீன் ,அப்துல் ரகுமான், வடக்கு ஒன்றிய செயலாளர் மதுரை வீரன்,மேற்கு பகுதி செயலாளர் அப்பாஸ் மந்திரி ,மாவட்ட இளைஞர் காங்.,தலைவர் அலியார் பங்கேற்றனர். ராஜ அலங்காரத்தில் முருகன் இருப்பது போன்ற படத்தை பரிசாக வழங்கினர்.
தி.மு.க., கூட்டம்
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆலோசனைப்படி ஓட்டுச்சாவடி முகவர்கள், பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. செயலாளர் தர்மராஜன் தலைமை வகித்தார். அவைத்தலைவர் செல்வராஜ், கவுன்சிலர் சண்முகம், ஊராட்சித் தலைவர் சிவராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். லெக்கையன்கோட்டை, அத்திக்கோம்பை, காளாஞ்சிபட்டி, கொல்லப்பட்டி ஊராட்சி கிளைச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
மாணவிகளுக்கு பயிற்சி
பழநி :பழநி சன்னிதி வீதியில் திண்டுக்கல் மாவட்ட அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பழநியாண்டவர் மகளிர் கலைக்கல்லுாரி வரலாற்று துறை மாணவிகளுக்கு அருங்காட்சிய பொருட்கள் பாதுகாப்பு எனும் தலைப்பில் ஏழு நாள் பயிற்சி துவங்கியது. தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி என்ற தலைப்பில் விருதுநகர் அருங்காட்சியக காப்பாட்சியர் பால்ராஜ் விளக்ம் அளித்தார். கல்லுாரி முதல்வர் புவனேஸ்வரி, அருங்காட்சியக காப்பாட்சியர் குணசேகரன், வரலாற்று துறை தலைவர் ஜெயந்திமாலா, தங்கம், குமுதவள்ளி, கிருஷ்ணவேணி கலந்து கொண்டனர்.
வாசக்டமி முகாம்
சாணார்பட்டி: கன்னியாபுரம் அம்பிகா காட்டன் மில்லில் பணிபுரியும் ஆண் அலுவலர்கள் ,பணியாளர்களுக்கான நவீன வாசக்டமி குடும்ப கட்டுப்பாடு முகாம் நடந்தது. அம்பிகா காட்டன் மில் பொது மேலாளர் வீரக்குமார் தலைமை வகித்தார். பொது மேலாளர் (தொழில்நுட்பம்) ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். கொசவபட்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அசோக்குமார் ,நடமாடும் மருத்துவகுழு டாக்டர் அரவிந்த், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சேகர், மருத்துவமில்லா மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் பேசினர். ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் நல்லேந்திரன், முனியப்பன், குணசீலன், மனிதவள மேம்பாட்டு அலுவலர் ஆனந்த் செய்திருந்தனர்.
வரி பாக்கி: 7 கடைகளுக்கு சீல்
திண்டுக்கல்: மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவில் உதவி செயற்பொறியாளர் வள்ளி ராஜம், உதவி வருவாய் அலுவலர் முத்துகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பழநிரோடு, நத்தம் ரோடு, சிப்காட் தொழிற் பேட்டை பகுதிகளில், தொழில் வரி, சொத்து வரி செலுத்தாமல் இருந்த 7 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.