ADDED : ஜன 31, 2024 06:57 AM
விழிப்புணர்வு போட்டிகள்
திண்டுக்கல் : தமிழ்நாடு சுற்றுச்சூழல்துறை, சீட்ஸ் அறக்கட்டளை,பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்திய சூழலியல் சார்ந்த கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் திண்டுக்கல் அட்சுதா சி.பி.எஸ்.இ., மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. 50 பள்ளிகளைச் சார்ந்த 250 மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் பரிசு வழங்கினார். சுற்றுச்சூழல் உறுதிமொழி எடுக்கப்பட்டது. மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன், சீட்ஸ் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் முத்துசாமி, பயிற்சி இயக்குநர் அய்யப்பன் , சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் கதிரேசன் பங்கேற்றனர்.
உடற்தகுதி தேர்வு வகுப்புகள்
திண்டுக்கல் : மாவட்ட வேலைவாய்ப்பு , தொழில்நெறி வழிகாட்டும் மையத் தன்னார்வப் பயிலும் வட்டம் மூலமாக அரசுப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுவோருக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பெற்ற இரண்டாம் நிலைக் காவலர், சிறைக் காவலர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வில், எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடற்தகுதித் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கியது. விருப்பமுள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு , தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக தொடர்பு கொண்டு விவரங்களைப் பதிவு செய்து பயிற்சி வகுப்பில் சேரலாம்.
உறுதிமொழி ஏற்பு
திண்டுக்கல் :மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. டி.ஆர்.ஓ., சேக் முகையதீன் வாசிக்க அனைவரும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்றுக்கொண்டனர். தொடர்ந்து நாட்டின் விடுதலைக்காக உயிர்நீத்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் அலுவலர்கள் எழுந்து நின்று 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கோட்டைக்குமார், ராணி உட்பட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு பணிக்கு நேர்காணல்
திண்டுக்கல்: மாவட்டத்தில் உள்ள கோயில் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்கள் உடல் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து காலியாக உள்ள 31 பணியிடங்களுக்கு ஒப்பந்த ஊதிய முறையில் பணி நியமனம் செய்வதற்கு நேர்காணல் நடத்தப்படவுள்ளது. தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள், உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டையுடன் நேரில் அணுகலாம்.
நலவாரியம் ஆய்வு
திண்டுக்கல்: தமிழ்நாடு கட்டுமான நல வாரிய தலைவர் பொன் குமார் ,திண்டுக்கல் நலவாரிய அலுவலகத்தை ஆய்வு செய்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கினார். தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் வாரிய செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.தொழிலாளர் உதவி ஆணையர் ராஜ்குமார் பங்கேற்றனர்.