ADDED : பிப் 14, 2024 05:41 AM
மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு
திண்டுக்கல்; திண்டுக்கல் மாநகராட்சி அதிகாரிகள் 32,33,34 வார்டுகளில் ஆய்வு செய்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். மேயர் இளமதி தலைமை வகித்தார். கமிஷனர் ரவிச்சந்திரன்,துணை மேயர் ராஜப்பா,செயற்பொறியாளர்கள் சுப்பிரமணியன்,நாராயணன் முன்னிலை வகித்தனர். 3 வார்டுகளையும் முழுமையாக ஆய்வு செய்து அப்பகுதி மக்களுக்கு தேவையான பாதாளசாக்கடை,குடிதண்ணீர்,ரோடு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய உத்தரவிட்டப்பட்டது.
பிளாஸ்டிக் அபராதம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் ரவிசந்திரன் உத்தரவில் மாநகர நல அலுவலர் பரிதாவாணி,சுகாதார ஆய்வாளர்கள் செல்வராணி,லீலாபிரியா,காமராஜ்,பாலமுருகன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று திண்டுக்கல் மெயின்ரோட்டில் ஆய்வு செய்தனர். 6 கடைகளில் 20 கிலோ தடை பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது தெரிந்தது. அவைகளை பறிமுதல் செய்து ரூ.9 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
போலீசார் விழிப்புணர்வு
திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சார்பில் திண்டுக்கல் ஹோலி கிராஸ் பள்ளியில் மாணவர்களுக்கு ரயில் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இன்ஸ்பெக்டர் சுனில்குமார் தலைமை வகித்தார். தண்டவாளங்கள் அருகே மக்கள் செல்லக்கூடாது. தண்டவாளங்களில் கற்கள் வைக்ககூடாது. ரயில் வரும் போது தண்டவாளங்கள் அருகே செல்ல வேண்டாம். ரயில் பயணத்தின் போது வாசலில் நிற்க வேண்டாம். ரயில்வே ஸ்டேஷன் வளாகத்திற்குள் ரயில் வரும் போது செல்பி எடுக்க வேண்டாம் என்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திண்டுக்கல்: திண்டுக்கல் கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவில் சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் பஸ் ஸ்டாண்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஆக்கிரமிப்புகளை உருவாக்குவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர். நகரின் மேலும் சில பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
புகையிலை பதுக்கல்
திண்டுக்கல்: திண்டுக்கல் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் கலைவாணி,உணவு பாதுகாப்பு அலுவலர் சாபர் சாதிக் தலைமையில் நேற்று மது விலக்கு பிரிவு போலீசாருடன் இணைந்து போலியம்மன்னுார் புதியில் 20 கடைகளில் ஆய்வு நடந்தது. கராட்டுப்பட்டி போலியமானுார் அரசு நடு நிலை பள்ளி அருகில் விறகு கட்டைக்குள் பீட்டர் செல்வசிங் என்பவர் புகையிலை பதுக்கியது தெரிந்தது. அதை பறிமுதல் செய்து ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இதேபோல் கடைகளில் பதுக்கிய 3 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
காஸ் சிலிண்டர் வழங்கல்
ஒட்டன்சத்திரம் :மத்திய அரசு உஜ்வாலா திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு இலவச காஸ் சிலிண்டர், காஸ் அடுப்பு வழங்கும் நிகழ்ச்சி காளாஞ்சிபட்டியில் நடந்தது. ஒட்டன்சத்திரம் பா.ஜ., கிழக்கு ஒன்றிய செயலாளர் ருத்திரமூர்த்தி, அரசு நலத்திட்டங்கள் பிரிவு ஒன்றிய தலைவர் மூர்த்தி, கிளைத் தலைவர் ராஜகோபால், கூட்டுறவு பிரிவு ஒன்றிய தலைவர் சின்ராஜ், அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு ஒன்றிய தலைவர் காளீஸ்வரன், தரவுதள மேலாண்மை பிரிவு ஒன்றிய துணைத் தலைவர் அருண்குமார், திப்பம்பட்டி கிளை தலைவர் வேல்முருகன், விவசாய அணி நிர்வாகி சக்திவேல் கலந்து கொண்டனர்.
டூவீலர் ஊர்வலம்
திண்டுக்கல்: விலைவாசி உயர்வை கட்டுபடுத்த வேண்டும். பெட்ரோல்,டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி கூட்டமைப்பு சார்பில் டூவீலர்,ஆட்டோ ஊர்வலம் நடந்தது. திண்டுக்கல் நாகல்நகரில் தொடங்கிய ஊர்வலம் பேகம்பூர்,முகமதியாபுரம்,சக்தி டாக்கீஸ்,பழநி ரோடு வழியாக பஸ் ஸ்டாண்டில் முடிந்தது. எல்.பி.எப்., மாவட்ட செயலாளர் அழகர்சாமி தலைமை வகித்தார். தொழிற்சங்க நிர்வாகிகள் ஹெச்.எம்.எஸ். சையது,ஏ.ஐ.டி.யு.சி. ராஜாங்கம், சி.ஐ.டி.யு.பிரபாகரன்,ஐ.என்.டி.யு.சி.உமாராணி பங்கேற்றனர்.

