/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தூய்மை கிராமமாகும் கே.புதுக்கோட்டை ஊராட்சி
/
தூய்மை கிராமமாகும் கே.புதுக்கோட்டை ஊராட்சி
ADDED : செப் 14, 2015 03:42 AM
ரெட்டியார்சத்திரம்:கே.புதுக்கோட்டை ஊராட்சியை தூய்மை கிராமமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது.திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தூய்மை கிராமத்திட்டம் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்காக குறிப்பிட்ட ஊராட்சிகளை தேர்வு செய்து, சுகாதார வசதிகளை முழுமையாக பெற்ற கிராமமாக உருவாக்குவதற்கான ஏற்படுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒன்றியம் வாரியாக செயல்பாடுகளின் அடிப்படையில் இதற்கான ஊராட்சிகள் தேர்வு செய்யப்படுகின்றன. ரெட்டியார்சத்திரம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அலெக்சாண்டர் கூறுகையில், ''24 கிராம ஊராட்சிகளில் முதற்கட்டமாக, கே.புதுக்கோட்டை ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. தூய்மை கிராம திட்டத்தின் முதன்முதலில் முழுமைப்படுத்திய ஊராட்சி பகுதியாக மாற்றப்பட உள்ளது.இதற்காக அனைத்து வீடுகளிலும் கழிப்பறை அமைத்து, திறந்தவெளி கழிப்பறை பயன்பாடு இல்லாத கிராமமாக மாற்றுவதே முதல்பணி. சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளவும், 12 ஆயிரத்து 600 ரூபாய் மானியத்தில் தனிநபர் கழிவறை ஏற்படுத்துவதும் முக்கிய நடவடிக்கைகளாக இருக்கும். கழிப்பறைக்கான இடவசதியற்ற குடும்பத்தினர், கிராம பொதுக்கழிப்பறையை பயன்படுத்துவதன் மூலமும், ஊராட்சி நிர்வாகம் அமைக்கும் குப்பைத்தொட்டிகளை மட்டுமே பயன்படுத்தும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப் படுகிறது. அனைத்து பணிகளையும் முழுமைப்படுத்தி, அக்டோபர் 2க்குள் முழுமையான தூய்மை கிராமமாக அறிவிக்க ஏற்பாடுகள் நடக்கிறது,'' என்றார்.