/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கலாசாரத்தை பிரதிபலிக்கும் துணி ஓவியம்
/
கலாசாரத்தை பிரதிபலிக்கும் துணி ஓவியம்
ADDED : அக் 28, 2015 11:04 AM
காந்திகிராமம் : 'கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் துணி ஓவியங்கள் கற்றால் அதிக லாபம் ஈட்டலாம்', என காந்தி கிராம பல்கலை சார்பில் நடந்த துணி ஓவியப் பயிற்சியில் பங்கேற்ற நிபுணர் தெரிவித்தார். காந்தி கிராம பல்கலையின் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உயர்கல்வி மையத்தின் சார்பில், துணிஓவிய பயிற்சி நடந்தது. துணைவேந்தர் நடராஜன் தலைமை வகித்தார். கிராமிய தொழில்துறை தலைவர் பேராசிரியர் ராதாகிருஷ்ணன், பேராசிரியர் சவுந்திரபாண்டியன், அரசியல் அறிவியல்துறை பேராசிரியர் பழனித்துரை, மாற்றுத்திறன் மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டாக்டர் சாமுவேல் தவராஜ் முன்னிலை வகித்தனர்.இந்தியளவில் துணி ஓவியங்கள் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. அதில் புவிசார் குறியீடு கர்நாடகாவை சேர்ந்த 'பித்ரி' கலை ஓவியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அதுதவிர ஆந்திராவில் கலம்காரி, மத்திய பிரதேசத்தின் 'கோந்த்', பீகார் மாநில 'மதுபனி' துணி ஓவியங்கள் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. இவை 'பேப்ரிக் ஆர்ட்' (துணி ஓவியங்கள்) என அதிக புகழ்பெற்றுள்ளன.
கோவை துணிஓவிய நிபுணர் வசந்தா கூறியதாவது: இந்தியாவில் மாநிலங்கள் தோறும் விதவிதமான கலாச்சார, பண்பாட்டு, பழக்கவழக்கங்கள் உள்ளன. நாட்டுப்புற கலைகளில் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபாடு உள்ளன. அதை, 'பேப்ரிக் ஆர்ட்'டாக துணிகளில் வரைந்து அதை விற்றால் நல்ல லாபம் ஈட்டலாம். ஒருமுறை துணி ஓவியம் வரைந்த பின், நன்றாக காய வைக்க வேண்டும். பின், ஓவியம் வரைந்த துணியின் பின்புறத்தில் இஸ்திரி செய்து உபயோகித்தால், நீண்ட நாட்கள் பயனளிக்கும். இந்த முறையில் சுடிதார், சட்டை, சேலைகள், பைகள் தயாரித்து அதிக லாபம் ஈட்டலாம், என்றார். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் செந்தில்குமார் நன்றி கூறினார்.