sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தள்ளாடுதே தமிழகத்தின் 'ஹாலந்து' : திண்டுக்கல் பூக்கள் சாகுபடியில் புதுமை அவசியம்

/

தள்ளாடுதே தமிழகத்தின் 'ஹாலந்து' : திண்டுக்கல் பூக்கள் சாகுபடியில் புதுமை அவசியம்

தள்ளாடுதே தமிழகத்தின் 'ஹாலந்து' : திண்டுக்கல் பூக்கள் சாகுபடியில் புதுமை அவசியம்

தள்ளாடுதே தமிழகத்தின் 'ஹாலந்து' : திண்டுக்கல் பூக்கள் சாகுபடியில் புதுமை அவசியம்


ADDED : ஜன 03, 2019 07:59 AM

Google News

ADDED : ஜன 03, 2019 07:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் மண்ணில் ஊறிக்கிடப்பது விவசாயம் தான். நெல், கரும்பு, வாழை, சிறுதானியங்கள், காய்கறிகள், பழங்கள், பணப்பயிர்கள், மலைப்பயிர்கள் என எந்த வகை சாகுபடியும் இங்கு சாத்தியம். உணவு பொருட்கள் மட்டுமின்றி, அழகு பெண்கள் தலைச்சூடும் பூக்களும், மலர் மாலை ஊடே ஏறும் கண்கவர் பூக்களும், பொக்கே தயாரிக்கப் பயன்படும் 'கொய்மலர்' எனும் அலங்கார பூக்களும்கூட திண்டுக்கல் மாவட்ட மண்ணில் சாகுபடியாகின்றன.

மலர் சாகுபடியில் தமிழகத்துக்கே முன்னோடியாக விளங்குவது இம்மாவட்டம். அதனால் தான் பூக்கள் உற்பத்தியில் அசைக்க முடியா இடம் பிடித்த 'ஹாலந்து' நாட்டுடன் திண்டுக்கல் ஒப்பிடப்படுகிறது.இப்பெயர் திண்டுக்கல் மாவட்டத்துக்கு கிடைக்க முக்கிய காரணம் நிலக்கோட்டை வட்டாரம். இங்கு மட்டும் 1,616.53 எக்டேர் பரப்பில் மலர் சாகுபடி செய்யப்படுகிறது. இதுதவிர ஆத்துாரில் 126.19, வத்தலக்குண்டுவில் 320.17, திண்டுக்கல்லில் 217.71, குஜிலியம்பாறையில் 8.58, ரெட்டியார்சத்திரத்தில் 144.10, சாணார்பட்டியில் 8.51, வடமதுரையில் 99.47, வேட

சந்துாரில் 16.68 உட்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,566.31 எக்டேர் பரப்பில் மலர் சாகுபடி நடக்கிறது. மல்லிகை, பிச்சி, ரோஜா, அரளி உள்ளிட்ட நீண்ட கால மலர் சாகுபடியும், செவ்வந்தி, சம்பங்கி, கோழிக்கொண்டை, வாடாமல்லி, முல்லை உள்ளிட்ட குறிப்பிட்ட கால மலர் சாகுபடியும் நடைபெறுகிறது. மலைப்பகுதிகளில் பசுமை குடில்களில் அலங்கார பூக்கள் சாகுபடியாவதும் உண்டு.

ஒரு காலத்தில் திண்டுக்கல் விவசாயிகள் மலர் சாகுபடியால் மனம் நிறைய சம்பாதித்தனர்.

அப்போது மல்லிகை உள்ளிட்ட நீண்ட கால பூக்களை பெரிய அளவில் சாகுபடி செய்தனர். தற்போது நிலைமை தலைகீழாகிவிட்டது. பிற விவசாயத்தை போல மலர் சாகுபடியும் சவால்களை சந்திக்க துவங்கிவிட்டது. ஆம், மலர் சாகுபடியில் 'தமிழகத்தின் ஹாலந்து' தள்ளாட துவங்கிவிட்டது. மலர் விவசாயம் மடிந்துவர இயற்கையே பிரதான காரணம். கடந்த பத்து ஆண்டுகளாகவே பருவநிலையை கணிக்க முடியவில்லை. விவசாயிகள் மழைக்கு தவமிருந்தால், வறட்சி ருத்ரதாண்டவம் ஆடுகிறது. போதுமான தண்ணீர் கிடைத்துவிட்டது என ஆறுதலடையும்போது, வெள்ளம் பாய்ந்து பந்தாடுகிறது. இதனால் பூ விவசாயிகள் பாதிப்படைகின்றனர்.வறட்சி காரணமாக மல்லிகை, ரோஜா, பிச்சி, அரளி போன்ற நீண்ட கால பயிர்களை சாகுபடி செய்வதில் இருந்து விவசாயிகள் பின்வாங்கிவிட்டனர். எனவே இவற்றின் சாகுபடி பரப்பு

கணிசமாக குறைந்துவிட்டது. சிலர் குறுகிய கால பூக்கள் சாகுபடிக்கு திரும்பினர். பலர் பூ விவசாயத்தையே அடியோடு கைகழுவி, மாற்று வழிதேட துவங்கிவிட்டனர்.அரசும் பூ விவசாயிகளின் நலனில் அக்கறை கொள்ள தவறிவிட்டது. இச்சாகுபடிக்கு அரசின் பங்களிப்பு அறவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ரோஜா, மல்லிகை, சம்பங்கி தவிர, வேறு எந்த பூக்களையும் சாகுபடி செய்ய மானியம் வழங்குவதில்லை. இதனால் ஒரு நாற்று ரூ.2 முதல் ரூ.5 வரை செலவிட்டு வாங்க வேண்டிய அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

உதாரணமாக, அரை ஏக்கர் பரப்பில் ஆறு ஆயிரம் நாற்றுகள் நடவேண்டும் என்றால், ஆகும் செலவை கணக்கிட்டு பாருங்கள். இதுபோக உரம், மருந்துக்கு ஆகும் செலவு தனி. இவை எதற்கும் மானியம் கிடையாது. இத்தனை சவால்களை எதிர்கொண்டு மலர் சாகுபடி செய்தாலும் போதிய விலை கிடைப்பதில்லை.

போதாத குறைக்கு அரசியல்வாதிகளும் 40 ஆண்டுகளாக பூ விவசாயிகளை வைத்து அரசியல் காய் நகர்த்துகின்றனர். பூக்கள் அபரிமிதமாக விளையும்போது அதனை வீணாக்காமல் பயன்படுத்த, நிலக்கோட்டை, திண்டுக்கல்லை மையப்படுத்தி வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்பது 40 ஆண்டு கோரிக்கை. அதனால் மல்லிகைக்கு நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் நம்புகின்றனர். இதனை அரசியல் கேளிக்கையாக மாற்றிவிட்டனர் கரை வேட்டிக்காரர்கள்.சட்டசபை, லோக்சபா என எந்த தேர்தல் வந்தாலும், 'நிலக்கோட்டை, திண்டுக்கல்லை மையப்படுத்தி வாசனை திரவிய தொழிற்சாலை அமைப்பேன். உங்கள் மல்லிகைக்கு நல்ல விலை கிடைக்கும்' என கட்சிவேறுபாடின்றி எல்லா வேட்பாளர்களும் ஓட்டு வேட்டையாடுகின்றனர். தேர்தல் முடிந்த பிறகு அவ்வாக்குறுதி மறக்கடிக்கப்படும். 1970களில் இருந்து ஒலிக்கும் வாசனை திரவிய கோரிக்கைக்கு இனியாவது உயிரூட்டம் அளிக்க முன்வர வேண்டும் என்பதுதான் மிச்சமிருக்கும் மலர் விவசாயிகளின் எதிர்பார்ப்பு.திண்டுக்கல் மாவட்டத்தில் குறைந்து வரும் மலர் சாகுபடியை காப்பாற்ற அரசு சில நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்.

முதலில் வாசனை திரவிய தொழிற்சாலைகளை அரசு சார்பில் அமைக்க வேண்டும். அங்கு மல்லிகைக்கு அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டும். சரியான, நிலையான விலையாக அது இருக்க வேண்டும்.

எதற்கெல்லாமோ கோடி கோடியாய் நிதி ஒதுக்கும் அரசு மலர் விவசாயம் மறுவாழ்வு பெறவும் புதிய திட்டங்களை தீட்டி நிதி ஒதுக்க வேண்டும். அனைத்து பூக்களும் சாகுபடி செய்ய மானியம் வழங்க வேண்டும். பூக்களுக்கு நல்ல விலை கிடைக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

பூ சாகுபடி பரப்பை பெருக்க வேண்டும். இல்லையென்றால், திண்டுக்கல், 'தமிழகத்தின் ஹாலந்து' என்ற அந்தஸ்தை இழக்கும். அதற்கு முன் அரசு உறக்கம் கலைக்குமா...!

த.தினேஷ்

படங்கள்: கே.மணிகண்டன்

கொடைக்கானலும் கொய்மலரும்


சமவெளிப்பகுதிகள் மட்டுமின்றி, கொடைக்கானலிலும் மலர் சாகுபடி நடக்கிறது. அங்குள்ள தட்பவெட்ப நிலைக்கு ஏற்ற ரோஜா மற்றும் கொய்மலர்கள் சாகுபடியாகின்றன. இங்கு மட்டும் 1,500 ஏக்கரில் ரோஜா, 1,000 ஏக்கரில் பல நூறு வகை கொய்மலர்கள் சாகுபடி செய்கின்றனர். இம்மலை மலர் சாகுபடியும் விவசாயிகளை வாழவைக்க மறுக்கிறது. காரணம், அறுவடை செய்யும் மலர்களை விற்க மார்க்கெட் இல்லை. இங்கிருந்து கோவை, பெங்களூருக்குதான் கொண்டு செல்ல வேண்டும். இதனால் செலவு அதிகரிப்பதால் கொய்மலர் சாகுபடிக்கு தயங்குகின்றனர். எனவே கொடைக்கானலில் கொய்மலர் மார்க்கெட்டை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.கொடைக்கானல் தோட்டக்கலை துணை இயக்குனர் நாராயணசாமி கூறுகையில், 'கொய்மலர், ரோஜா பற்றி மக்கள் தெரிந்து கொள்ளவும், அதன் அழகை ரசிக்கவும் 6 ஏக்கரில் பூங்கா அமைத்துள்ளோம். விவசாயிகளுக்கு விற்பனை செய்ய மார்க்கெட் இல்லாதது குறைதான். இதனை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்' என்றார்.

வளைகுடாவுக்கு பறக்குமா வாசனை பூக்கள்


'மதுரை மல்லி'க்கு பெயர் வர காரணமான நிலக்கோட்டை பகுதியில் மல்லிகையில் இருந்து வாசனை திரவியம் தயாரிக்கும் மூன்று தனியார் தொழிற்சாலைகள் உள்ளன. இதுபோன்று அரசு சார்பில் அமைந்தால் விவசாயிகளுக்கு நன்மை கிட்டும். அனைத்து பூக்களுக்கும் மானியம் வழங்கினால் பூ விவசாயம் காப்பாற்றப்படும். ரெட்டியார்சத்திரம் மகத்துவ மையத்தில் எல்லா வகை பூக்களுக்கும் நாற்று தயார் செய்து மானிய விலையில் வழங்கலாம்.நம்மூரில் கட்டப்படும் பூக்களை வளைகுடா நாட்டு பெண்கள் விரும்பி தலையில் சூடுகின்றனர். கோவை போன்ற நகரங்களில் இருந்து பூக்களை கட்டி, பிரத்யேக அட்டை பெட்டிகளில் அடுக்கி விமானத்தில் அனுப்புகின்றனர். கை நிறைய சம்பாதிக்கின்றனர். அதுபோல திண்டுக்கல் விவசாயிகளும் பூக்களை கட்டி வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் பணம் பார்க்கலாம். பூ ஏற்றுமதி செய்ய அரசு வழிகாட்டலாம்.இல்லங்களில் அழகுக்காக வைக்கும் இட்லி பூக்களுக்கு கேரளாவில் வரவேற்பு உள்ளது. இப்பூக்களை தோட்டங்களில் விவசாயிகள் சாகுபடி செய்யலாம். கிருஷ்ணகிரியில் கொய்மலர் சாகுபடி செய்து விவசாயிகள் அசத்துகின்றனர். இங்கும் பசுமைக்குடில் மூலம் கொய்மலர் சாகுபடி செய்யலாம், என திண்டுக்கல் தோட்டக்கலை துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

பூ மார்க்கெட்டுக்கு புதிய கட்டிடம்


சில ஆண்டுகளுக்கு முன்பு நிலக்கோட்டை பூ மார்க்கெட் புதுப்பிக்கப்பட்டது. அங்கு 60க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ஆனால் 127 கமிஷன் கடைகளுடன் திண்டுக்கல் மார்க்கெட் தொடர்ந்து இடவசதியற்ற பழைய கட்டடத்திலேயே இயங்குகிறது. தினமும் 15 ஆயிரம் பேர் வந்து செல்லும் 30 ஆண்டு பழைய கட்டடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்து விபரீதம் விளைவிக்கலாம். எனவே புதிய கட்டடம் அவசியம். தற்போது செயல்படாமல் உள்ள பழைய கோர்ட் வளாகத்திலேயே இதற்கான கட்டடத்தை மாநகராட்சி நிர்வாகம் அமைக்கலாம். பெங்களூரு பூ மார்க்கெட்டில் நவீன எந்திரம் மூலம் கழிவுகளை உடனுக்குடன் அரைத்து உரமாக்குகின்றனர். அவ்வசதியை இங்கும்

ஏற்படுத்த வேண்டும். பூக்களை இருப்பு வைக்க அரசு சார்பில் குளிர்சாதன கிட்டங்கிகள் அமைக்கப்பட வேண்டும், என திண்டுக்கல் பூ மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்தனர்.

அன்றாட வரத்து எவ்வளவு


திண்டுக்கல், நிலக்கோட்டை பூ மார்க்கெட்களில் ஓணம், கல்லறை திருநாள், தை திருநாள், முகூர்த்த நாட்கள், பண்டிகை காலங்களில் விற்பனை சக்கைப்போடு போடும். திண்டுக்கல் பூ மார்க்கெட்டுக்கு சாதாரண நாளில் 5 டன் பூக்களும், விசேஷ நாட்களில் 15 டன் பூக்களும் விற்பனைக்கு வருகின்றன. நிலக்கோட்டை மார்க்கெட்டுக்கு சாதாரண நாளில் 10 முதல் 20 டன்னும், விசேஷ நாட்களில் 30 டன் பூக்களும் வருகின்றன. இங்கிருந்தே பிறமாவட்டங்கள், கேரளா, கர்நாடகம் போன்ற வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

மானியம் கிடைக்குமா


நாங்கள் செண்டுமல்லி, அரளி, கோழிக்கொண்டை சாகுபடி செய்துள்ளோம். பூக்கள் சாகுபடியில் திண்டுக்கல் சிறந்து விளங்குவது, தொடருமா என்பது கேள்விக்குறியே. பூ விவசாயத்துக்கு வறட்சிதான் முதல் எதிரி. 2008 ம் ஆண்டுக்கு பிறகு திண்டுக்கல் மாவட்டத்தில் போதிய மழை இல்லை. அப்படியே பெய்தாலும் உரிய பருவத்தில் கிடைக்கவில்லை. அடுத்து பொதுவாகவே விவசாயிகளை புறக்கணிக்கும் அரசு, பூ விவசாயிகளை கண்டுகொள்வதே இல்லை. ஒரு செண்டு மல்லி நாற்றை ரூ.3க்கு வாங்கி நட்டுள்ளேன். அரை ஏக்கரில் 6 ஆயிரம் நாற்றுகள் நட்டுள்ளேன். இதற்கு உரம், பூச்சி மருந்து என செலவு எகிறிவிட்டது. ஆனால் பூக்களுக்கு போதிய விலை கிடைப்பதில்லை. இதற்கான விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். மானியம் வழங்க வேண்டும்.

-செல்வமாணிக்கம், பச்சமலையான்கோட்டை

'சென்ட் பேக்டரி' எப்போது


தமிழகத்தின் ஹாலந்து தற்போது மலர் சாகுபடியில் சறுக்கலை சந்திக்கிறது. அரசிடம் இருந்து பூக்கள் உற்பத்தியை ஊக்குவிக்க திட்டங்கள் இல்லை. அனைத்து பூ சாகுபடிக்கும் மானியம் வழங்குவதில்லை. ஒவ்வொரு நாளும் விலையில் ஏற்க முடியாத மாற்றங்கள் உள்ளன. ஒரு நாள் ரூ.1000க்கு விலை போகும் மல்லிகை, மறுநாள் ரூ.200க்கு போகிறது. நிரந்தரமற்ற விலையை நம்பி மலர் சாகுபடி செய்வது பல்வேறு சிக்கல்களை தருகிறது. நிலக்கோட்டை, திண்டுக்கல்லை மையப்படுத்தி அரசு சார்பில் மல்லிகை பூக்களுக்கான சென்ட் பேக்டரி அமைக்க வேண்டும். அங்கு குறிப்பிட்ட விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.

-செல்வராஜ், சிலுக்குவார்பட்டி

மலர் சாகுபடி நிலவரம்


பூவின் பெயர்

(எக்டேரில்)

ரோஜா 163.30

மல்லிகை 806

முல்லை 95.99

ஜாதி மல்லிகை 43.76

கனகாம்பரம் 62.66

செவ்வந்தி 131.13

அரளி 494.29

கோழிக்கொண்டை 38.21

சூரியகாந்தி 84.62

சம்பங்கி 299.65

காக்கரட்டான் 40.6

வாடாமல்லி 8

பிச்சி 257.26

மரு 36






      Dinamalar
      Follow us