ADDED : ஜூலை 13, 2025 12:18 AM

நத்தம்: அலைபேசி சிக்னல் வசதி இல்லாததால் ரேஷன் பொருட்கள் வழங்க முடியாமலும், மருத்துவ அவசரத்திற்கு 108 ஆம்புலன்சை கூட தொடர்பு கொள்ள முடியாமல் சக்கிலியான்கொடை கிராமமக்கள் தவிக்கின்றனர்.சாணார்பட்டி ஒன்றியத்தில் உள்ள கணவாய்பட்டி ஊராட்சியில் உள்ளது சக்கிலியான்கொடை. தற்போது வரை இங்கு அலைபேசி டவர் வசதி இல்லாததால் கிராமத்தில் அலைபேசி பயன்படுத்த முடியாத நிலையில் மக்கள் அவதிப்படுகின்றனர்.
அலைபேசி சிக்னலை தேடி 3 கிலோமீட்டர் சென்று போன் பேசிவிட்டு மீண்டும் வருகின்றனர். இளைஞர்கள் கிராமத்தின் அருகில் உள்ள உயரமான மலைப்பகுதிக்கு சென்று போன் பேசுவது, இணையத்தை பயன்படுத்துகின்றனர். இங்குள்ள ரேஷன் கடையில் இணைய வசதி இல்லாமல் பொருட்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.தபால் நிலையத்திலும் இணைய வசதியின்றி அங்குள்ள அலுவலர்கள் பணி செய்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. தபால் நிலையத்தில் முழுமையான சேவைகளை பெற முடியாமலும், மருத்துவ அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட சேவைகளை பெற முடியாமலும் மக்கள் தவிக்கின்றனர்.
பின் தங்கிய நிலை
பி.கார்த்திகைச்சாமி, பா.ஜ.க., கிழக்கு மாவட்ட செயலாளர், செடிப்பட்டி:சக்கிலியான்கொடை மக்கள் ஆம்புலன்ஸ் சேவைக்கும் வழி இல்லாமல் 30 ஆண்டுகளுக்கு பின் தங்கிய நிலையில் உள்ளனர். இந்த கிராமம் மட்டும் இன்றி சாணார்பட்டி ஒன்றியத்தில் மலைப்பட்டி, பெருமாள் கோவில்பட்டி, படுகைக்காடு, பாப்பம்பட்டி,கொரசின்னம்பட்டி உள்ளிட்ட கிராமங்களிலும் பொதுமக்கள் சார்பாக டவர் அமைக்க கோரிக்கை வைத்துள்ளோம். கிராம மக்களின் வளர்ச்சிக் காகவும், கல்வி பயிலும் மாணவர்களின் நலனுக்காகவும் அலைபேசி டவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஷ பூச்சி தாக்கி பாதிப்பு
பி.சதீஷ்குமார், விவசாயி, சக்கிலியான்கொடை: ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கக்கூட இணைய வசதி இல்லாமல் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகிறோம். மாணவர்கள் இணைய வசதியின்றி கல்வியில் பின்தங்கிய நிலையில் உள்ளனர். சிக்னல் கிடைக்கும் இடத்தை தேடி மூன்று கிலோமீட்டர் வரை சென்று படித்து வரும் அவல நிலை உள்ளது. கிராம வளர்ச்சிக்காக டவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதோடு பள்ளி காம்பவுண்ட் சுவர் சேதம் அடைந்த நிலையில் மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அலைபேசி சிக்னல் வசதிக்காக இளைஞர்கள் சிக்னலை தேடி மலையின் உச்சி வரை சொல்வதால் சிலர் விஷ பூச்சி தாக்கி பாதிப்பை சந்திக்கின்றனர்.