/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இல்லவே இல்லை வடிகால்கள்... சகதியாகும் ரோடுகள் பிரச்னைகளின் பிடியில் திண்டுக்கல் 14வது வார்டு மக்கள்
/
இல்லவே இல்லை வடிகால்கள்... சகதியாகும் ரோடுகள் பிரச்னைகளின் பிடியில் திண்டுக்கல் 14வது வார்டு மக்கள்
இல்லவே இல்லை வடிகால்கள்... சகதியாகும் ரோடுகள் பிரச்னைகளின் பிடியில் திண்டுக்கல் 14வது வார்டு மக்கள்
இல்லவே இல்லை வடிகால்கள்... சகதியாகும் ரோடுகள் பிரச்னைகளின் பிடியில் திண்டுக்கல் 14வது வார்டு மக்கள்
ADDED : நவ 10, 2024 06:16 AM

திண்டுக்கல் : சேதமான ரோடுகள்,எங்கு பார்த்தாலும் சுற்றித்திரியும் நாய்கள், கடித்து குதறும் கொசுக்கள்,கண்ட இடமெல்லாம் குப்பை , கண்டு கொள்ளாத அதிகாரிகள் என ஏராளமான பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர் திண்டுக்கல் மாநகராட்சி 14வது வார்டு மக்கள்.
அண்ணாநகர்,விவேகானந்தாநகர்,திருச்சி ரோடு, வ.உ.சி.நகர், ஆர்த்தி தியேட்டர் ரோடு,சுப்ரீம் நகர்,டெலிபோன் காலனி உள்ளிட்ட பகுதிகளை கொண்ட இந்த வார்டில் எண்ணிலடங்கா பிரச்னைகளில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர். இங்குள்ள சேதமான ரோடுகளில் மக்கள் நடமாட முடியாமல் தடுமாறி கீழே விழுகின்றனர்.
அண்ணாநகரிலிருந்து விவேகானந்தா நகருக்கு செல்லும் ரோடு மண் ரோடாக இருப்பதால் மழை நேரங்களில் சகதிகள் உருவாகி அவ்வழியில் செல்வோர் தடுமாறி கீழே விழுகின்றனர்.
டூவீலர்களில் செல்ல முடியாமல் வேறு பாதையை மாற்றி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சுற்றித்திரியும் கால்நடைகளால் மக்கள் அச்சத்துடனே செல்லும் நிலை தொடர்கிறது. பகலிலும் கடிக்கும் கொசுக்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் தவிக்கின்றனர். மருத்து அடிக்க வரும் ஊழியர்களோ ஒரு சில இடங்களில் கடமைக்கு அடித்து செல்கின்றனர்.இதனால் கொசு உற்பத்தி கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தொடரும் இப்பிரச்னையால் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. ரோடுகளில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் அவைகளுக்குள் ஏற்படும் சண்டையில் மக்களை கடிக்கிறது. இதைத்தடுக்க வேண்டிய மாநகராட்சி நிர்வாகம் வேடிக்கை பார்க்கிறது. திருச்சி ரோடு மேம்பாலத்தில் தெரு விளக்குகள் எரியாமல் உள்ளதால் இரவில் இருள் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக வழிப்பறி சம்பவங்களும் அரங்கேறுகின்றன. ரோட்டரி ஹால் ரோடுகள் முழுவதும் சேதமாக உள்ளது. மக்கள் பிரச்னைகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காது ஆழந்த துாக்கத்தில் உள்ளனர்.
நாய்கள் தொல்லை
வெங்கடேசன்,சுப்ரீம்நகர்:அண்ணாநகர் பகுதியில் தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவைகளை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவதற்காக ஒருசில நாய்களை பிடித்து விட்டு அதையும் மீண்டும் அதே இடத்தில் விட்டு செல்கின்றனர். இதனால் எந்த பலனும் இல்லை. தொடரும் இப்பிரச்னையை தடுக்க அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். ரோடுகளை சீரமைக்க அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆனால் இதுவரை சரி செய்யப்படவில்லை.
ரோடுகளை சீரமையுங்க
சுப்பிரமணி, வ.உ.சி., நகர்:எங்கு பார்த்தாலும் கொசுக்களின் கூடாரமாக சாக்கடையில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. துார்வாரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மாதக்கணக்கில் கழிவுநீர் அப்படியே உள்ளது. முக்கிய பிரச்னையாக எங்கள் வார்டில் உள்ள ரோடுகள் பல பகுதிகளில் சேதமாகி குண்டும் குழியுமாக கிடக்கின்றன. இதுகுறித்து புகார்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் கொடுத்து விட்டோம். இருந்தாலும் எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. ரோடுகளை சீரமைப்பதற்கான பணியில் அதிகாரிகள் ஈடுபட வேண்டும்.
தெரு விளக்குகள் தேவை
ராஜேந்திரன்,சுப்ரீம்நகர்:அண்ணாநகர்,விவேகானந்தநகர்,சுப்ரீம் நகர் பகுதிகளில் தெரு விளக்குகள் எரியாமல் இருக்கிறது. இதனால் இரவில் இருள் சூழ்ந்திருக்கும் நிலை தொடர்கிறது. இதை பயன்படுத்தும் நபர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். பல பகுதிகளில் மண் தரைகளாக தான் இருக்கிறது. ரோடுகள் போடுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. தெருவிளக்குகளும் எரிவதில்லை இதை முறைப்படுத்த வேண்டும்.
புகாரளித்தும் நோ யூஸ்
தனபால்,கவுன்சிலர்,(பா.ஜ.,):வார்டில் உள்ள அண்ணாநகரில் உள்ள தண்ணீர் தொட்டி பல ஆண்டுகளாக சேதமாக உள்ளது. நானும் எத்தனையோ முறை அதிகாரிகளிடம் புகாரளித்து விட்டேன். இருந்தபோதிலும் எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. இதன்மீது கவனம் செலுத்தவும் அவர்களுக்கு நேரமில்லை. சாக்கடைகளை துார்வாராமல் இருப்பதால் எல்லா பகுதிகளிலும் அடைப்புகள் ஏற்பட்டு கழிவுநீர் ரோட்டில் செல்லும் அவலமும் நீடிக்கிறது. நிர்வாகம் வார்டு மீது கவனம் செலுத்த வேண்டும். டெலிபோன் காலனியில் வடிகால் அமைக்க வேண்டும் என்றார்.