/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சாலை, அலைபேசி டவர் இல்லை; தவிப்பில் நல்லபிச்சம்பட்டி மக்கள்
/
சாலை, அலைபேசி டவர் இல்லை; தவிப்பில் நல்லபிச்சம்பட்டி மக்கள்
சாலை, அலைபேசி டவர் இல்லை; தவிப்பில் நல்லபிச்சம்பட்டி மக்கள்
சாலை, அலைபேசி டவர் இல்லை; தவிப்பில் நல்லபிச்சம்பட்டி மக்கள்
ADDED : ஜூலை 19, 2025 02:49 AM

செந்துறை: தார் சாலை, அலைபேசி டவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி நல்லபிச்சம்பட்டி கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.
தகவல் தொடர்பில் '4ஜி 5ஜி' என நவீனத்துவத்தில் விரைவான வளர்ச்சி பெற்றுள்ளதால் ஒரு இடத்தில் இருந்தபடி உலகையே உள்ளங்கைக்குள் வைத்துள்ளனர் மக்கள்.
வியாபாரம், பணப்பரிமாற்றம், ஆன்லைன் வகுப்பு என அறிவியல் வளர்ச்சியால் தகவல் தொடர்பின் அத்தனை பயனையும் மக்கள் அனுபவித்து வருகின்றனர். இந்த காலத்திலும் அலைபேசி பயன்படுத்த வசதியின்றி தனித்தீவாக ஏங்கும் கிராமங்கள் இருக்கதான் செய்கின்றன.அந்த வகையில் மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் உள்ள நல்லபிச்சம்பட்டியில் அலைபேசி டவர் இல்லாததால் அலைபேசி உட்பட இணைய வதியை பயன்படுத்த முடியாமல் மக்கள் 30 ஆண்டுகளுக்கு பின் தங்கிய நிலையில் உள்ளனர். இதேபோல் செந்துறையில் இருந்து நல்லபிச்சம்பட்டி செல்லும் ரோடு ஜல்லி கற்கள் அனைத்தும் பெயர்ந்து குண்டும் குழியுமாக சேதம் அடைந்த நிலையில் உள்ளது. இதனால் இச்சாலையில் பயணிக்கும் கர்ப்பிணிகள், முதியவர்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இதேபோல் கிராமத்தில் உள்ள சில மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் விபத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றன. சேதமான மின்கம்பங்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பின்தங்கிய நிலையில்
ஞா.யோசுவா, ஆசிரியர்: 'டவர்' வசதி இல்லாததால் அலைபேசி உட்பட இணைய வசதியை பயன்படுத்த முடியவில்லை. இங்குள்ள 500க்கு மேற்பட்ட மாணவர்கள் பள்ளி, கல்லுாரிகள் நடத்தும் ஆன்லைன் வகுப்பிலும் பங்கேற்க முடியவில்லை.இதற்காக 3 கி.மீ.,க்கு அப்பால் உள்ள செந்துறை சென்று படிப்பதால் மாணவர்கள் பாதிக்கின்றனர். இணைய வசதி கிடைக்காததால் மாணவர்களும் படிப்பில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். டவர் வசதி ஏற்படுத்தித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண் கொடுக்க தயக்கம்
என்.ராமையா, கூலித்தொழிலாளி:விவசாயம், கால்நடை வளர்ப்பு அதிகமுள்ள இப்பகுதியில், தகவல் தொடர்பு இன்றி பால்,விவசாய பொருட்களை விற்க பலர் நேரடியாக செல்ல வேண்டியுள்ளது. மருத்துவ அவசரத்துக்கும் இதே நிலைதான். இக்குறைபாடால் பிற கிராமத்தினர் இங்குள்ள ஆண்களின் திருமணத்திற்கு பெண் கொடுக்கவும் தயங்குகின்றனர். தனித்தீவாக துண்டிக்கப்பட்டுள்ள இப்பகுதியில் அலைபேசி டவர் அமைத்து எங்கள் கிராமங்களில் வசதியை மேம்படுத்த வேண்டும்.