/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குடகனாறு அணைக்கு நீர்வரத்து இல்லை வறட்சி நீடிக்கும் அச்சம்
/
குடகனாறு அணைக்கு நீர்வரத்து இல்லை வறட்சி நீடிக்கும் அச்சம்
குடகனாறு அணைக்கு நீர்வரத்து இல்லை வறட்சி நீடிக்கும் அச்சம்
குடகனாறு அணைக்கு நீர்வரத்து இல்லை வறட்சி நீடிக்கும் அச்சம்
ADDED : டிச 22, 2025 05:37 AM

வேடசந்தூர்: அழகாபுரியில் உள்ள குடகனாறு அணைக்கு நடப்பு ஆண்டில் புதிய நீர் வரத்து அறவே இல்லாத நிலையில், ஏற்கனவே தேங்கி இருந்த தண்ணீர் மட்டும் அப்படியே நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. போதிய மழை பெய்து ஆற்றில் தண்ணீர் வராத நிலையில், வரும் காலங்களில் இப்பகுதியில் வறட்சி நீடிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஆத்தூர், தாடிக்கொம்பு, வேடசந்தூர் வழியாக செல்லும் குடகனாற்றின் குறுக்கே, அழகாபுரியில் 27 அடி கொள்ளளவு கொண்ட குடகனாறு அணை கட்டப்பட்டுள்ளது.
1977 ல் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் அணை உடைந்ததை தொடர்ந்து, ஏற்கனவே இருந்த 5 ஷட்டர்களுடன், கூடுதலாக 10 ஷட்டர்கள் வைக்கப்பட்டு அணை புதுப்பிக்கப்பட்டது. அணையிலிருந்து 2 கிளை வாய்க்கால் கள் மூலம் திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் ஒன்பதாயிரம் ஏக்கர் நிலம் நீர்ப்பாசனம் பெறுகிறது. இரு ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்த 5 ஷட்டர்கள் ரூ.15 கோடியில் புதுப்பிக்கப் பட்டது. அதேபோல் கிளை வாய்க்கால் ரூ.65 கோடியில், புதுப்பிக்கும் பணிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் முடிந்த நிலையில், கரூர் மாவட்ட பகுதியில் விரைவில் முடிவு பெறும் நிலையில் உள்ளன.
கடந்த ஆண்டு போதிய மழை பெய்த நிலையில், குடகனாறு அணையில் 26.5 அடி தண்ணீர் தேக்கி வைக்கப் பட்டு, பாசனத்திற்கு திறந்து விடப்பட்டது. 20 அடி தண்ணீர் குடிநீர் ஆதாரம் கருதி அணையிலேயே தேக்கி வைக்கப்பட்டது. தற்போது, 18.18 அடியாக குறைந்துள்ளது. 2025 நவ, டிச., மாதங்களில் போதிய மழை இல்லாத நிலையில், குடகனாறு ஆற்றில் தண்ணீர் வரத்து அறவே இல்லை. இதனால் குடகனாறு அணைக்கும் நீர்வரத்து என்பது, நடப்பு ஆண்டில் பூஜ்ஜியம் ஆகி விட்டது.
இதனால் வேடசந்தூர், குஜிலியம் பாறை உள்ளிட்ட தாலுகா பகுதிகளில் கடும் வறட்சி நீடிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

