ADDED : பிப் 18, 2025 05:35 AM

எரியோடு: எரியோட்டில் நடந்த பணி தரமில்லை எனக்கூறி பேரூராட்சி அலுவலகத்தில் தி.மு.க.,வை சேர்ந்த பேரூராட்சி துணைத் தலைவர் ஜீவா தர்ணா போராட்டம் நடத்தினார்.
எரியோடு பேரூராட்சியில் மறவபட்டி பகுதி தி.மு.க., கவுன்சிலராக இருப்பவர் ஜீவா. கட்சிக்கு எதிராகசெயல்பட்டதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
சில ஆண்டுகள் பின் சேர்க்கப்பட்ட நிலையில் 2022 பேரூராட்சித் தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிட்டு துணைத் தலைவர் பதவி பெற்றார். கட்சியில் பதவி இல்லாததால் பொது நிகழ்ச்சிகளில் ஜீவாவுக்கு முக்கியத்துவம் தரவில்லை.
அதிருப்தியில் இருந்த ஜீவா எரியோட்டில் நடந்த பணி தரமில்லை எனக்கூறி நேற்று காலை 11:00 மணிக்கு அலுவலக செயல் அலுவலர் அறையில் அமர்ந்து இரவு வரை தர்ணா போராட்டம் நடத்தினார்.
அவர் கூறுகையில், ''மறவபட்டி காலனி தெருவில் மழை நீர் வெளியேறும் வகையில் கால்வாய் அமைக்க ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் பணி துவங்கியது. பணி தரமற்றதாக இருப்பதாக மக்கள் என்னிடம் புகார் தெரிவித்தனர். இதுபற்றி கேட்டால் நிர்வாகத்தினர் பதில் தரவில்லை. இதனால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன் '' என்றார்.
செயல் அலுவலர் சையது அபுதாகீர் கூறுகையில்'' போராட்டம், அவரது கோரிக்கை குறித்து உயரதிகாரிக்கு தகவல் தந்துள்ளேன் '' என்றார்.

