/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
செவிலியருக்கு கத்திக்குத்து: டாக்டருக்கு அடி உதை தந்தை, மகன் கைது
/
செவிலியருக்கு கத்திக்குத்து: டாக்டருக்கு அடி உதை தந்தை, மகன் கைது
செவிலியருக்கு கத்திக்குத்து: டாக்டருக்கு அடி உதை தந்தை, மகன் கைது
செவிலியருக்கு கத்திக்குத்து: டாக்டருக்கு அடி உதை தந்தை, மகன் கைது
ADDED : அக் 09, 2025 02:56 AM

கள்ளிமந்தையம்: திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் அருகே தடுப்பூசி பணிக்கு சென்ற செவிலியர் கத்தியால் குத்தப்பட்டார். இவருடன் சென்ற மற்றொரு செவிலியர், விசாரிக்க சென்ற டாக்டரும் தாக்கப்பட்டனர். இதனால் களப்பணியில் பாதுகாப்பு கேட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை முன் செவிலியர்கள் மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் தந்தை, மகன் கைது செய்யப்பட்டனர்.
தொப்பம்பட்டி வாகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பொருளூர் துணை சுகாதார நிலைய கிராம சுகாதார செவிலியராக பணியாற்றி வருபவர் வைஜெயந்தி மாலா 51. இவர் தடுப்பூசி பணிக்காக நேற்று பொருளூர் காலனிக்கு சமுதாய நல செவிலியர் ஹேமலதா உடன் சென்றார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த மதன்குமார் 29, 'கடந்த மாதம் தடுப்பூசி போட்டதால் தான் தன் குழந்தை இறந்து விட்டதாக கூறி' அவர்களை அவதுாறாக பேசியதோடு இருவரையும் தாக்கி ஹேமலதாவை கம்பி முள்வேலியில் தள்ளி விட்டார். இதனிடையே மதன்குமாரின் தந்தை நல்லமுத்து55, வைஜெயந்திமாலாவின் பின்னால் வந்து கத்தியால் குத்தினார். இதில் அவர் கழுத்து, காதில் பலத்த காயமடைந்தார். வாகரை மருத்துவ அலுவலர் கவிச்சக்கரவர்த்திக்கு அலைபேசி மூலம் தகவல் கொடுக்க அங்கு வந்த அவரையும் தாக்கி கீழே தள்ளினர். காயமடைந்த மூவரும் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே அப்பகுதியை சேர்ந்த செவிலியர்கள் களப்பணியில் பாதுகாப்பு வேண்டும் என கோரி ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை முன் தாராபுரம் ரோட்டில் மறியல் செய்தனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேச்சுவார்த்தைக்குப்பின் மறியல் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் மதன்குமார், நல்லமுத்து ஆகியோரை கள்ளிமந்தையம் போலீசார் கைது செய்தனர்.