/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சுரண்டப்படும் மேற்கு தொடர்ச்சி மலையின் நீர் வளம் கடிவாளம் அமைக்க தயங்கும் அதிகாரிகள்
/
சுரண்டப்படும் மேற்கு தொடர்ச்சி மலையின் நீர் வளம் கடிவாளம் அமைக்க தயங்கும் அதிகாரிகள்
சுரண்டப்படும் மேற்கு தொடர்ச்சி மலையின் நீர் வளம் கடிவாளம் அமைக்க தயங்கும் அதிகாரிகள்
சுரண்டப்படும் மேற்கு தொடர்ச்சி மலையின் நீர் வளம் கடிவாளம் அமைக்க தயங்கும் அதிகாரிகள்
ADDED : ஆக 15, 2025 02:28 AM

ஆத்துார்: ஆத்துார் காமராஜர் நீர்தேக்கத்தை சுற்றிலும் செயல்படும் தனியார் குடிநீர், வணிக நிறுவனங்களால் நிலத்தடிநீர் பாதிப்பதால் இதற்கு நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.
காமராஜர் ஆட்சி காலத்தில் திண்டுக்கல் மாநகராட்சியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டது. ஆடலுார், மஞ்சள்பரப்பு, பெரும்பாறை, தாண்டிக்குடி போன்ற மலைக் கிராமங்களை நீர்பிடிப்பு பகுதிகளாகக் கொண்டுள்ளது. திண்டுக்கல் மாநகராட்சிக்கு தினமும் 20 எம்.எல்.டி.,க்கு கூடுதலான தண்ணீர் தேவைப்படுகிறது. காவிரி தண்ணீருக்கான தலைமை நீரேற்று நிலைய பகுதியான கரூர் மாவட்டம் புதுப்பாளையம் 2018ல் வெள்ளப்பெருக்கில் சிக்கியது. நீரேற்றம் பாதித்த நிலையில் திண்டுக்கல்லின் முக்கிய ஆதாரமாக ஆத்துார் நீர்தேக்கம் மட்டுமே உதவியாக இருந்தது.
சின்னாளபட்டி, சித்தையன்கோட்டை பேரூராட்சிகள், அக்கரைப்பட்டி, ஆத்துார், சீவல்சரகு வக்கம்பட்டி ஊராட்சிகளுக்கான குடிநீர் விநியோக கூட்டு குடிநீர் திட்ட ஆழ்துளை கிணறுகளும் இங்குள்ளன. அவ்வப்போது ஆண்டுக்கு அதிகபட்சமாக 3 முறை நிரம்பி மறுகால் பாய்வது வழக்கம். நீர்தேக்கத்தை சுற்றிலும் வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட ஏராளமான தனியார் குடிநீர், வணிக நிறுவனங்கள் உள்ளன. பல விதிமீறி ஆழ்துளை கிணறுகள் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கின்றன. தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் எடுத்து சுத்திகரித்து பாட்டில்களில் நிரப்பி வெளி மாவட்ட விற்பனைக்கு அனுப்புகின்றனர். அதிக அளவு உறிஞ்சி எடுக்கப்படும் நிலத்தடி நீரால் வறட்சி நிலையை எட்டுவது ஆத்துார் நீர்தேக்கத்தின் வாடிக்கையாகிவிட்டது. பூஜ்யத்தை கடந்து மைனஸ் நிலைக்கு நீர்மட்டம் குறைவதுடன் வரும் நாட்களில் திண்டுக்கல் மாநகராட்சி, சித்தையன்கோட்டை, சின்னாளபட்டி பேரூராட்சிகள், 60க்கு மேற்பட்ட கிராமங்களுக்கான குடிநீர் வினியோகத்தில் கடும் பாதிப்பிற்கான வாய்ப்பு அதிகரித்து வருகிறது.
தடைகள் தாராளம் மா.செந்தில்குமார், பா.ஜ., மாவட்ட துணை தலைவர், சின்னாளபட்டி: இதன் நீர்பிடிப்பு பகுதி வழித்தடத்தில் அனுமதியற்ற தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல தனியாருக்கு ஏதுவாக உருவாக்கப்பட்டு உள்ளன. அனுமதியற்ற தடுப்பணைகளை வரத்து நீரை பாதிக்கிறது. பல தடைகளை கடந்து மிக குறைவான உபரி நீர் இங்கு வந்தடைகிறது. சொற்ப நீர் வளத்தையும் சுற்றியுள்ள சில தனியார் வணிக நிறுவனங்கள் கபளீகரம் செய்கிறது. கூட்டுக்குடிநீர் திட்ட வினியோகத்தில் பாதிப்பு தொடர்கிறது. இது போன்ற நிலத்தடி வளங்கள் சுரண்டல்களை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. அதிகாரிகள் அலட்சியத்தால் மாவட்டம் முழுவதும் குக்கிராமங்களும் விலைக்கு தண்ணீர் வாங்கும் அவலத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. மலையடிவார கிராமங்களிலும் இதே நிலை பரவி வருகிறது.
தண்ணீர் திருட்டு ராஜேந்திரன்,விவசாயி, சித்தையன்கோட்டை: மாவட்டத்தில் சில ஒன்றியங்களை தவிர பிற இடங்களில் இருந்து விற்பனைக்காக தண்ணீர் எடுப்பதற்கு அரசு தடை அமலில் உள்ளது. நீர் ஆதார அமைப்புகளின் குறிப்பிட்ட சுற்றளவிற்கு தண்ணீர் எடுத்து விற்பதற்கு தடை உள்ளது. ஆத்துார் நீர்தேக்கத்திற்கு மிக அருகாமையில் இது போன்ற நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. வெளியூரில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து ஆத்துாரில் சுத்திகரிப்பு செய்து வினியோகிப்பதற்காக உரிமம் பெற்றுள்ளதாக கூறுகின்றனர். ஆனால் ஆத்துார் பகுதியில் பலர் வணிக நிறுவனங்களுக்காக ராட்சத ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் உறிஞ்சி எடுக்கின்றனர். இதே நிலையே தொடர்ந்தால் ஆத்துார் பகுதியில் நிலத்தடிநீர் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ளும்.