/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வைர வேலுடன் பழநி சென்ற நகரத்தார் காவடி குழுவினர்
/
வைர வேலுடன் பழநி சென்ற நகரத்தார் காவடி குழுவினர்
ADDED : பிப் 08, 2025 01:40 AM

நத்தம்,:-திண்டுக்கல் மாவட்டம் பழநிக்கு பாதயாத்திரையாக செல்லும் சிவகங்கை மாவட்ட நகரத்தார் காவடி குழுவினர் வைர வேலுடன் நேற்று நத்தத்தை கடந்து சென்றனர். அவர்களுக்கு வழி நெடுகிலும் அன்னதானம் வழங்கி மக்கள் வரவேற்றனர்.
பழநி தைப்பூசத்தையொட்டி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, தேவகோட்டை, கானாடுகாத்தான், கண்டனுார் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் பல ஆண்டுகளாக பாரம்பரியத்துடன் காவடிகள் எடுத்து பாதயாத்திரையாக சென்று வருகின்றனர்.
இந்தாண்டு பிப்., 2 தேவகோட்டையில் புறப்பட்ட இக்குழுவினர் நேற்று காலை நத்தம் மாரியம்மன் கோயில் அருகிலுள்ள வாணியர் பஜனை மடத்தை வந்தடைந்தனர். அங்கு தரிசனம் செய்த பிறகு பழநி புறப்பட்டனர். இவர்கள் பாரம்பரிய முறைப்படி மேல் சட்டை அணியாமல் வெள்ளை வேட்டி, பச்சை துண்டு உடுத்தியிருந்தனர்.
வழக்கமாக கொண்டு வரும் வைர வேலையும் கொண்டு சென்றனர். வழிநெடுகிலும் பக்தர்கள்வேலுக்கு பன்னீர், எலுமிச்சம், மலர்கள் செலுத்தி வழிபட்டனர். பல்வேறு அமைப்பினர் இக்குழுவினருக்கு அன்னதானம் வழங்கினர்.