UPDATED : நவ 17, 2026 07:07 PM
ADDED : நவ 17, 2026 07:02 PM
பட்டிவீரன்பட்டி-:
செங்கட்டாம்பட்டியில் குடிநீர் கேட்டு போராடிய கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர்.
செங்கட்டாம்பட்டியில் 2 ஆயிரம் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு நான்கு ஆழ்துளை கிணறுகள் பழுதடைந்து விட்டதால் கடந்த 9 மாதங்களாக குடிநீர் வழங்கவில்லை. கிராம மக்கள் ஒரு குடம் தண்ணீர் ரூ.5 முதல் 10 விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்துகின்றனர். ஒரு டேங்கர் டிராக்டர் தண்ணீர் ரூ.1200க்கு வாங்கும் நிலை உள்ளது.
பலமுறை வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டினர்.
