/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பங்குனி உத்திரம்: பழநியில் குவிந்த பக்தர்கள்
/
பங்குனி உத்திரம்: பழநியில் குவிந்த பக்தர்கள்
ADDED : ஏப் 12, 2025 04:32 AM
பழநி : பங்குனி உத்திர திருவிழாவினை முன்னிட்டு தீர்த்தக்காவடி எடுத்தும், பாதையாத்திரையாக வந்தும் ஏராளமான பக்தர்கள் பழநியில் குவிந்தனர்.
பழநி கிரி வீதியில் மேளதாளத்துடன் அலகு குத்தி, பால்காவடி, பன்னீர், மயில், புஷ்பம், தொட்டில், கரும்பு, இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான காவடிகளை எடுத்து வந்தனர். கும்மியாட்டம், கோலாட்டம், தேவராட்டம், காவடியாட்டம் என கிரிவீதியைச் சுற்றி வந்தனர். குடமுழுக்கு மண்டபத்திலிருந்து குழுவாக யானை பாதையில் பக்தர்கள் மலைக்கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
4 மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். எடுத்து வந்த தீர்த்த காவடிகளை திருஆவினன்குடி, மலைக்கோயிலில் செலுத்தி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
பழநி கோயில் உள், வெளி பிரகாரங்கள் ஒரு டன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
1,800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பழநியில் இருந்து வெளியூர் செல்லும் பக்தர்களுக்கு தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டிருந்தது. திண்டுக்கல் ரோடு, தாராபுரம் ரோடுகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பூங்கா ரோடு, இடும்பன் கோயில் வீதி பகுதிகளில் ஆக்கிரமிப்பு அதிகம் இருந்ததால் பக்தர்கள் அவதிப்பட்டனர்.