/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குடிநீர் வசதி இன்றி தவிக்கும் சேணன்கோட்டை மக்கள் 3 மாதங்களாக தண்ணீர் வரவில்லை; புகார் கூறியும் நடவடிக்கை இல்லை
/
குடிநீர் வசதி இன்றி தவிக்கும் சேணன்கோட்டை மக்கள் 3 மாதங்களாக தண்ணீர் வரவில்லை; புகார் கூறியும் நடவடிக்கை இல்லை
குடிநீர் வசதி இன்றி தவிக்கும் சேணன்கோட்டை மக்கள் 3 மாதங்களாக தண்ணீர் வரவில்லை; புகார் கூறியும் நடவடிக்கை இல்லை
குடிநீர் வசதி இன்றி தவிக்கும் சேணன்கோட்டை மக்கள் 3 மாதங்களாக தண்ணீர் வரவில்லை; புகார் கூறியும் நடவடிக்கை இல்லை
ADDED : ஜூலை 02, 2025 06:57 AM

வேடசந்தூர் : சேணன்கோட்டை வடக்கு பகுதி மக்கள் குடிநீர் வசதியின்றி கடந்த மூன்று மாதங்களாக தவித்து வருகின்றனர். போதிய குடிநீர் வசதியை செய்து தர ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் முன் வர வேண்டும்.
வேடசந்தூர் ஒன்றியம், நாகம்பட்டி ஊராட்சி சேணன்கோட்டையில் 300 வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக ஆஞ்சநேயர் கோயில் அருகேயும், ஒட்டநாகம்பட்டி பிரிவு அருகேயும் போர்வெல்கள் அமைத்து, இரண்டு மேல்நிலைத் தொட்டிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இங்குள்ள பெரும்பாலான மக்கள் விவசாயம் மற்றும் நூற்பாலை தொழிலை சார்ந்து உள்ளனர். அதேபோல் மாணவர்கள் வேடசந்தூர், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், கரூர் உள்ளிட்ட நகர் பகுதிகளுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், நாகம்பட்டி வடக்கு பகுதியில் உள்ள 15 வீடுகளுக்கு மட்டும், கடந்த 3 மாதங்களாக குடிநீர் விநியோகம் இல்லை. குடிநீர் பைப் லைனில் மரத்தின் வேர் அடைத்துக் கொண்டதால், தண்ணீர் செல்லவில்லை என்கின்றனர். எனவே, இப்பகுதி மக்கள் ஊரின் தெற்கு பகுதிக்கு சென்று குடிநீர் பிடித்து வருவதால் காலதாமதம் ஆவதாகவும், குழந்தைகளை பள்ளி கல்லூரிகளுக்கு அனுப்புவதிலும், வேலைக்குச் செல்வதிலும் சிரமம் உள்ளதாக கூறுகின்றனர். பைப் லைனை பழுது பார்த்து முறையான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தண்ணீருக்காக வெகுதுார பயணம்
பி.முத்துலட்சுமி, தனியார் நிறுவன ஊழியர், சேணன்கோட்டை: 'சேணன்கோட்டை வடக்கு பகுதிக்கு கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் விநியோகம் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் படும் துயரங்களுக்கு அளவே இல்லை. பலமுறை புகார் கூறிவிட்டோம். முறையான எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் வடக்கு பகுதி மக்கள் வெகு தூரம் நடந்து சென்று தண்ணீர் பிடித்து வர வேண்டி உள்ளது. குடங்களை தூக்கி தண்ணீர் பிடிக்க முடியாத மக்களுக்கும், இப்பகுதி மக்கள் தான் தண்ணீர் பிடித்துக் கொடுக்கின்றனர். இப்பகுதிக்கு வரும் குடிநீர் பைப் லைனில் மரத்தின் வேர் அடைத்துக் கொண்டதாக கூறுகின்றனர். பறித்து பார்த்தோம் கண்டுபிடிக்க முடியாததால் மக்கள் தொடர்ந்து குடிநீரின்றி பாதிக்கப் படுகின்றனர். நடவடிக்கை தேவை' என்றார்.
குடிநீர் வசதி வேண்டும்
ஏ.செல்வி, குடும்பத் தலைவி, சேணன்கோட்டை: ஊராட்சி தலைவர் இருந்திருந்தால் கூட, இந்நேரம் குடிநீர் வசதியை செய்து தந்திருப்பார். அதிகாரிகளிடம் கூறி எந்த நடவடிக்கையும் இல்லை. இரு வாரங்களுக்கு முன்பு திருவிழா கொண்டாடிய போது, அதிகாரிகளிடம் பேசியதால், இரண்டு நாட்களுக்கு டிராக்டரில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றினார்கள். அதன் பிறகு எந்த உதவியும் இல்லை. இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஐந்து பேர் உள்ள ஒரு குடும்பத்திற்கு, தண்ணீர் குடிக்க, சமைக்க, குளிக்க, துவைக்க என எவ்வளவு தண்ணீர் தேவைப்படுகிறது. அவ்வளவு தண்ணீரை சுமந்து சிரமப்படுகிறோம். காலையில் பரபரப்பான சூழலில் காலதாமதம் ஆகிறது. மக்களின் நலன் கருதி குடிநீர் பைப் லைனை சரி செய்து, முறையான குடிநீர் வழங்க முன்வர வேண்டும் என்றார்.