/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விபத்து பாலங்களால் பரிதவிக்கும் கெங்கையூர் மக்கள்
/
விபத்து பாலங்களால் பரிதவிக்கும் கெங்கையூர் மக்கள்
ADDED : அக் 13, 2024 05:21 AM

வடமதுரை: விபத்து ஆபத்தான பாலங்கள், தடுப்புச்சுவர் இல்லாத ஓடை என பல்வேறு சிக்கல்களால் கெங்கையூர் பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.
அய்யலுார் பேரூராட்சியின் 11வது வார்டில் கெங்கையூர், கஸ்பா அய்யலுார், மண்டபத் தோட்டம், வடக்கு களம், தெற்கு களம், கொத்தமல்லிபட்டி என குக்கிராமங்கள் உள்ளன. ஏ.கோம்பை, புத்துார் முடிமலை என இரு பகுதியில் இருந்து உருவாகி வரும் வரட்டாறுகள் கெங்கையூர், கஸ்பா அய்யலுார் இடையே ஒன்று சேர்கின்றன. இங்கு கட்டபட்டுள்ள தடுப்பணையில் இருந்து அய்யலுார் தும்மினிக்குளத்திற்கு நீர் கொண்டு செல்ல வாய்க்கால் உள்ளது. இதன் அருகிலே தடுப்புச்சுவர் இன்றி ரோடு அமைக்கப்பட்டுள்ளதால் விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. தடுப்பணை அருகில் கோம்பை பகுதியில் இருந்து வரும் வரட்டாற்றில் இருக்கும் தரைப்பாலமும் பலமிழந்து ஆபத்தாக உள்ளது. மேலும் சீரற்ற தரைப்பாலம் ஒரு திசையிலும் ரோடு ஒரு திசையிலும் இருப்பதால் குறுகிய வளைவாக ரோடும் இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.
.........................
பலமிழந்த தரைப்பாலம்
வி.கிருஷ்ணன், ஊர் பெரிய தனம், கெங்கையூர் : கெங்கையூரில் உமை காளியம்மன் கோயில் பகுதியில் சாக்கடை கட்டமைப்பு இல்லாமல் சிரமமாக உள்ளது. இங்கு சிமின்ட் தளம் ,பேவர் பிளாக் கற்கள் பதிக்க வேண்டும். கெங்கையூர் வழியே செல்லும் ரோடு உயரமாகவும், பல ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட வடிகால் கட்டமைப்பு பள்ளத்திலும் இருப்பதால் விபத்துக்கள் ஏற்படுகிறது. வடிகால் கட்டமைப்பை உயரப்படுத்த வேண்டும். கெங்கையூர் தடுப்பணை அருகில் இருக்கும் தரைப்பாலம் பலமிழந்து வருகிறது. மண்டபத்தோட்டம் செல்லும் ரோட்டில் கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.
...............
-பாலம் இல்லாமல் சிரமம்
எம்.வைரப்பெருமாள், கோயில் பூசாரி, கெங்கையூர்: கஸ்பா அய்யலுார் அங்கன்வாடி மையம் அருகில் குழந்தைகளுக்கு ஆபத்தாக ஏற்பட்டிருக்கும் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
கெங்கையூரில் இருந்து மண்டபத்தோட்டம் வழியே வடக்கு களம், தெற்கு களம் பகுதிக்கு செல்ல வரட்டாற்றை கடக்க வேண்டும். இங்கு இரு இடங்களில் பாலம் இல்லாமல் அதிக சிரமம் ஏற்படுகிறது. மண்டபத் தோட்டம் வழியே அரசன்செட்டிபட்டியை இணைக்க தற்போது வழித்தடம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை மேம்படுத்தி தார் ரோடாக மாற்ற வேண்டும். கொத்தமல்லிபட்டிக்கு சிமென்ட் ரோடு வேண்டும்.
...............
சிரமத்தில் - விவசாயிகள்
ஜி.சரஸ்வதி, குடும்பத்தலைவி, கெங்கையூர்:கஸ்பா அய்யலுாரில் பொதுசுகாதார வளாகம் பயனற்று கிடக்கிறது. கோம்பை ரோட்டில் இருந்து கோடாங்கிசின்னான்பட்டி வழியே திண்டுக்கல் நான்குவழிச்சாலையை இணைக்கும் ரோட்டில் கஸ்பா அய்யலுார் அருகில் இருக்கும் தரைப்பாலம் சேதமடைந்துள்ளது. மழை காலத்தில் நீர் வரத்து ஏற்படும்போது அதிக சிரமம் ஏற்படுகிறது. இங்கு நாடக மேடை, சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும். இப்பகுதி மாணவர்கள் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் ரோட்டில் இரு பக்கமும் முட்புதர்கள் வளர்ந்துள்ளன. பாதையும் சேறும், சகதியாக இருப்பதால் பள்ளி மாணவர்கள், விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
..........
-மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு
எம்.செந்தில், பேரூராட்சி துணைத்தலைவர் (தி.மு.க.,), அய்யலுார்: கெங்கையூரில் இருந்து மண்டப தோட்டத்திற்கு தார் ரோடு புதுப்பிக்கப்பட்டுள்ளது. மண்டபத்தோட்டம் பகுதியில் இரு இடங்களில் வரட்டாற்றில் சிறு பாலங்கள் புதிதாக கட்டவும், தடுப்பணை இருக்கும் பழுதான தரை மட்ட பாலத்த்திற்கு பதிலாக உயர் மட்ட பாலம் கட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகிறேன். பாதுகாப்பற்ற தடுப்பணை தரைப் பாலத்தை கடந்த கிராம உதவியாளர் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு படுகாயம் அடைந்தார். கஸ்பா அய்யலுாரில் இருக்கும் பாலத்தையும் உயர்மட்டமாக மாற்றியமைக்க கோரியுள்ளேன். ஒதுக்கப்படும் நிதி ஆதாரத்தை பெற்று மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பேன்.
-